ADVERTISEMENT

டெல்லியில் சோகம்.. உணவக தீ விபத்தில் 21 பேர் பரிதாப பலி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Delhi Restaurant Fire Accident

டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (ஜூன் 3) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மாளவியா நகரில் உள்ள ‘லெமன் கிரீன்’ (Lemon Green) என்ற உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், காலை 8:50 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

ADVERTISEMENT

உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த 3 பேர் உட்பட 35க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டு, கேட்ஸ் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை; மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி இரங்கல்

இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா இரங்கல்

இந்த விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனே டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மீட்புக் குழுவினரின் உடனடி மற்றும் துரிதமான நடவடிக்கையால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share