சென்னை கோயம்பேடு தனியார் மதுபான பார் மோதல் சம்பவத்தில், கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த கொடூர சம்பவத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான பாரில் கடந்த 31ஆம் தேதி இரவு இரு தரப்பினர் மது அருந்திக் கொண்டிருந்தனர். மதுபோதையில் அங்கு நடனமாடிய போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்தது. இதையடுத்து பாரின் ஊழியர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினர். எனினும், ஆத்திரம் அடங்காத இரு தரப்பினரும் வெளியேயும் சாலையில் மோதிக்கொண்டனர்.
கார் ஏற்றி படுகொலை
இந்த மோதலின் போது, பாலகுரு என்பவரின் காரின் கண்ணாடியை யான்சி (18) என்ற இளம்பெண் கல்வீசி தாக்கிவிட்டு, தனது தோழியான 17 வயது சிறுமி மற்றும் உடன் வந்த இரண்டு இளைஞர்களுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகுரு மற்றும் அவரது நண்பர்கள், தங்களது காரால் யான்சி சென்ற இருசக்கர வாகனத்தை ஓட ஓட விரட்டிப் பின்னால் பலமாக மோதினர்.
இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த யான்சி (18) ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
7 பேர் கைது
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், சுமன், ஜோஸ்வா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது பலி
இந்நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட மோதல், கார் ஏற்றி இரண்டு இளம்பெண்கள் படுகொலை செய்யப்படும் அளவிற்கு விபரீதமாக முடிந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
