மன்னிப்பு கேட்ட பன்னீர்: என்னிடம் முறையிட்டால் விலகியிருப்பேனே- நீதிபதி!

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி வரை முறையிட்ட  ஓ.பன்னீர் செல்வம் இன்று  (ஆகஸ்டு 5)  அதற்காக அந்த நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதை  தடை செய்யுமாறு ஓ.பன்னீர் செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில் ஜூலை 11 காலை 9 மணிக்கு பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து பன்னீர் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றமோ இதை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.

இந்த நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே விசாரணைக்கு வரும் என்ற தகவல் வந்த நிலையில், ஏற்கனவே அளித்த தீர்ப்பில் பன்னீரை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனிப்பட்ட முறையில் விமரிசித்ததால், இவ்வழக்கை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பன்னீர் தரப்பிலும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பிலும் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (ஆகஸ்டு 4) விசாரணைக்கு வந்தபோது  பன்னீரின் இந்த செய்கையை கீழ்த்தரமான செய்கை என்று வர்ணித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார். இதற்குப் பிறகு நேற்று மாலை மீண்டும் தலைமை நீதிபதியை சந்தித்த பன்னீர் தரப்பு வழக்கறிஞர், ‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது’ என்று இரண்டாவது  முறையாக வலியுறுத்தினார்.

இந்த பின்னணியில் இன்று (ஆகஸ்டு 5) பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார்.  

“இந்த வழக்கை தங்களிடம் இருந்து மாற்றக் கோரியதற்காக எனது கட்சிக்காரர் ஓ. பன்னீர் செல்வம் சார்பாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்திருப்பதால் புதிய நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் தரப்பின் நோக்கமாக இருந்ததே தவிர,   தங்களிடம் எங்களுக்கு எந்த புகாரும் இல்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நீங்களே இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரியுங்கள்” என்றார்.

அப்போது நீதிபதி,  இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் கொடுத்த மனுவை திரும்ப பெற்று, புதிய மனுவை வழங்குமாறு கோரினார். ஆனால் பன்னீர் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கிறோம், மன்னிப்பு கோரி தனியாக மனு தாக்கல் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டனர்.

அதன் பின் கருத்து தெரிவித்த நீதிபதி,  “நான் ஏற்கனவே உங்களது மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில்  புதிய நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பது நல்லது என்று என் முன் நீங்கள்  வெளிப்படையாகக்  குறிப்பிட்டிருந்தால்… இரண்டு நாட்களுக்கு முன்பே வழக்கிலிருந்து விலகியிருப்பேன். பிரச்சினை இவ்வளவு சிக்கலாகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.  

-வேந்தன்

போலீஸ் பேரிகார்டை தாண்டி குதித்த பிரியங்கா காந்தி

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.