பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் Operation Sindoor ராணுவ நடவடிக்கை முடிந்துவிடவில்லை; சர்வதேச நாணய நிதியமான IMF-ன் நிதியை பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை மாவட்டமான கட்ச் பூஜ்-ல் உள்ள பூஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வெறும் பாதுகாப்பு விஷயமல்ல. இது தேசிய பாதுகாப்பு கோட்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. நேரடி அல்லது மறைமுகப் போர்களை இந்தியா முறியடிக்கும்.
தற்போதைய போர் நிறுத்தம் என்பது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனை. பாகிஸ்தான் தனது மோசமான நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் நல்லது; இதற்கு மாறாக இடையூறுகளை ஏற்படுத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. நமது நடவடிக்கைகள் வெறும் முன்னோட்டம் மட்டுமே; தேவைப்பட்டால் முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது புதிய இந்தியாவின் நடவடிக்கை.
இந்தியாவால் அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை பாகிஸ்தான் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது. இஸ்லாமாபாத்திற்கு வழங்கிய ஒரு பில்லியன் டாலர் உதவியை மறுபரிசீலனை செய்யுமாறும், எதிர்காலத்தில் எந்த ஆதரவையும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் சர்வதேச நாணய நிதியத்தை கேட்டுக் கொள்கிறோம்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்க பாகிஸ்தான் அரசு நிதி உதவியை வழங்குகிறது.
சர்வதேச நிதியத்தின் ஒரு பில்லியன் டாலர் உதவியில் பெரும்பகுதி பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாத நிதியுதவிக்குக் குறைவானதல்ல.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத முகாம்களை வெறும் 23 நிமிடங்களில் அழித்த விமானப்படை வீரர்களைப் பாராட்டுகிறோம். எதிரிகளின் எல்லைக்குள் ஏவுகணைகள் வீசப்பட்டபோது, இந்தியாவின் வீரத்தையும், வலிமையையும் உலகம் பார்த்தது.
இந்தியாவின் போர் விமானங்கள் எல்லையைத் தாண்டாமல் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் திறன் கொண்டவை. இந்திய விமானப்படை, பயங்கரவாத முகாம்களையும் பின்னர் பாகிஸ்தானின் விமான தளங்களையும் எவ்வாறு தாக்கியது என்பதை உலகம் கண்டது. இந்தியாவின் போர்க் கொள்கையும், தொழில்நுட்பமும் மாறிவிட்டன.
இந்தியா இப்போது இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களையும், தளவாடங்களையும் மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் நமது ராணுவ சக்தியின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.
1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்களின் போதும், தற்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பூஜ் சாட்சியாக உள்ளது. தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் வீரர்கள் உயர்ந்து நிற்கும் ஒரு தேசபக்தி பூமியாக பூஜ் உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களிடையே பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகாமை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
