Operation Sindoor ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்.
ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகர் விமான நிலையத்தில் ஜெய் ஹிந்த் முழக்கத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் ராணுவ வீரர்களிடையே ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில், உரிய வழிகாட்டுதல்களில் Operation Sindoor ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதப்படுகிறது. நான் இங்கே ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சராக நிற்பதைவிட தேசத்தின் குடிமகனாக நின்று பேசுகிறேன். ஒரு இந்திய குடிமகனாக ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்ட ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன். பஹல்காமில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன். இந்த யுத்தத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
சர்வதேச சமூகத்துக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பாகிஸ்தான் போன்ற நாசகார நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானது அல்ல; ஆகையால் சர்வதேச அணு சக்தி முகாமையானது, பாகிஸ்தான் வசமுள்ள அணு ஆயுதங்களைப் பறிமுதல் செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.