பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வந்த அவரது புதிய வீடு அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி பல ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர். ஏற்கனவே கைதான 11 பேரில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் போலீஸ் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்வதற்காக அவருக்கு எதிரான மோட்டிவ் கொண்ட பல கேங்க்ஸ்டர்கள் ஒன்று சேர்ந்ததும், இந்த ஆபரேஷனுக்காக பத்து கோடி ரூபாய் வரைக்கும் செலவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை வட்டாரங்களில் துருவியபோது…
“ஆம்ஸ்ட்ராங்கை சாதாரணமாக யாரும் நெருங்க முடியாது. அவரை சந்திக்க வேண்டுமென்றால் அவரது பாதுகாப்பு வளையங்களின் சோதனைக்குப் பிறகுதான் சந்திக்க முடியும்,
இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஆறு மாதங்களாக ரவுடிகளை ஒன்றிணைத்து இந்த ஆபரேஷனைத் தீட்டியிருக்கிறார்கள். கொலைச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் குடும்பங்களைக் காப்பாற்ற நிதியாக பல கோடிகளைத் திரட்டியுள்ளனர். இதற்கு ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளாக சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் தாதாக்கள் விரிவான திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதாவது இந்த திட்டமிடுதலில் எல்லா சாதி ரவுடிகளும் இருந்திருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் சமூகத்தைச் சேர்ந்த சில ரவுடிகளும், நாயுடு, தெலுங்கு செட்டியார், குறவர், வன்னியர், முக்குலத்தோர் மற்றும் கொங்கு ரவுடிகளும் ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத் தள்ள நேரம் பார்த்து வந்தனர்.
இந்த நேரத்தில் ஆருத்ரா கோல்டு மோசடி நிறுவனம் மற்றும் சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆம்ஸ்ட்ராங் மீது கோபத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள்.
இந்த தகவல்களை அறிந்த புழல் சிறையில் உள்ள முக்கிய தாதா ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கால் பாதிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கினார்.
இவரது முயற்சிக்கு வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருக்கும் மோகன்ராம் என்ற ரவுடியும் கை கொடுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் மீது கை வைப்பதற்கு அரசியல் சப்போர்ட் வேண்டும் என்று கருதிய அவர், மயிலாப்பூர் மலர்கொடியின் ஆதரவைக் கேட்டார். மலர்க்கொடியின் மகன் அழகுராஜா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
மலர்கொடி அதிமுகவில் பொறுப்பில் இருந்தார். வழக்கறிஞராகவும் பெண் தாதாவாகவும் வலம் வருகிறார், இவரது கணவர் தோட்டம் சேகரை கொலை செய்தது மயிலாப்பூர் சிவக்குமார் என்பவர். பழிக்குப் பழியாக சிவக்குமாரை தீர்த்துக் கட்டினார் மலர்கொடி மகன் அழகு ராஜா.
மலர்கொடி தனது மகன் அழகுராஜாவை குழந்தையிலிருந்தே, ”நீ ஒரு பெரிய ரவுடியாக வளரவேண்டும். சென்னையை ஆளவேண்டும்” என்று சொல்லியே வளர்த்தவர். இந்த மலர்கொடி மீது 9 வழக்குகள் உள்ளது.
அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கால் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமான அஞ்சலை ஆதரவையும் கேட்டார். அவரும் ஆதரவு கரத்தை நீட்டினார். இந்த அஞ்சலை பாஜகவில் இருக்கிறார். சில பாஜக பிரமுகர்களுக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் பெரிய அளவில் பொருளாதார உதவி செய்தவர். இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளை அறிந்து ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தானாகவே முன்வந்தார்.
தமாகா மாணவர் அணி துணைத் தலைவரும் வழக்கறிஞருமான ஹரிஹரன் என்பவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள மலர்கொடி மகன் அழகுராஜாவின் வழக்கறிஞர் ஆவார். அவரது ஆலோசனைகள்படி மலர்கொடி மூலமாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பண உதவி, வாகன உதவி ஆட்களை தங்க வைக்கும் உதவியை செய்து கொடுத்துள்ளார்கள்.
வழக்கறிஞர் ஹரிஹரனுக்கு பின்னால் சம்பவ செந்தில் இருக்கிறார். இவர் புழல் சிறையில் உள்ள நாகேந்திரனின் ஆதரவாளர். மேலும் சீசிங் ராஜா என்பவரும் இருப்பதாக விசாரணை நீள்கிறது.
மோகன் ராம் முக்குலத்தோர், ஹரிஹரன் தெலுங்கு செட்டியார், சீசிங் ராஜா நாயுடு, அழகுராஜாவும் அவரது தாயார் மலர்கொடியும் நாயக்கர், நாகேந்திரன் பட்டிலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சிறையில் இருக்கும் தாதாக்கள், சிறைக்கு வெளியே இருக்கும் தாதாக்கள், இவர்களுக்கு தகவல் தொடர்பாளர்களாக ஒருங்கிணைப்பாளார்களாக செயல்பட்ட வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரோடு சில போலீஸ் உயரதிகாரிகளும் இந்த ஆபரேஷனில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி.
இந்த நெட்வொர்க்கில் செயல்பட்ட மோகன் ராம் ஏற்கனவே சில முறை கைது செய்யப்பட்டவர். அவர் சில முறை என்கவுன்ட்டர் பட்டியலில் இருந்தபோது அவரை காப்பாற்றியதே சில போலீஸ் உயரதிகாரிகள்தான். அந்த போலீஸ் உயரதிகாரிகளும் ஆபரேஷன் ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் உதவியாக இருந்திருக்கிறார்கள்.
மற்ற ‘சம்பவங்களை’ காட்டிலும் ஆம்ஸ்ட்ராங் சம்பவத்துக்கு ஏன் இத்தனை திசைகளில் இருந்து தாதாக்கள் ஒருங்கிணைந்தார்கள்? எதற்காக பணப் பரிமாற்றமும் பெரிய அளவில் நடந்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.
பொதுவாகவே கூலிக்கோ அல்லது எதிரி ரவுடியை போட்டுத்தள்ளவோ திட்டமிட்டு முக்கிய நபர்களுடன் மீட்டிங் நடத்துவார்கள். ஒரு வழக்கில் 10 பேர் சரண்டரானால் அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற சில லட்சங்கள் நிதி கொடுப்பார்கள். அடுத்தது வழக்கறிஞர்களுக்கு பெரிய தொகையை கொடுக்க ஒதுக்கீடு செய்வார்கள். கொலை செய்வதற்கு உதவி செய்யும் நண்பர்கள் வாகனம் வாங்குவதற்கு சாப்பாடு ஹோட்டல் செலவு என நிதி சேகரித்து அனைவருக்கும் பங்குப்போட்டு கொடுத்து அரங்கேற்றுவார்கள்.
விஐபி அல்லது முக்கிய கொலைகள் என்றால் சரண்டராகி முழு விசாரணை முடிந்த பிறகு வழக்கில் உள்ள குடும்பத்தினருக்கு பெரிய அளவில் நிதி கொடுப்பார்கள்.
அப்படித்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு சுமார் பத்து கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டல் நடந்திருக்கிறது. அதன் பிறகுதான் ஆம்ஸ்ட்ராங் ஆபரேஷன் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
பத்து கோடி எப்படி வசூல் செய்ய முடியுமா? என்று கேட்டபோது,
“காஞ்சிபுரம் ஏஎஸ்பி யாக ஸ்ரீநாதா இருந்த போது, பிரபலமான தாதா ஸ்ரீதர் ஆதரவாளர்கள் அனைவரையும் பிடித்து சிறைக்கு அனுப்பினார். ஸ்ரீதரை விடாமல் விரட்டி வந்தார். அப்போது ஸ்ரீதர் மனைவி மற்றும் அவரது மகள் பெயரில் இருந்த சொத்துகளை முடக்கினார். அந்த சொத்துகளின் கைடு லைன் மதிப்பு 200 கோடிகள். ஆனால், அதன் வெளி மார்கெட் மதிப்பு 2,000 கோடி ரூபாய். இத்தனைக்கும் அந்த ஸ்ரீதருக்கு பேன் கார்டு கூட இல்லை.
இது சிறிய உதாரணம். தமிழ்நாட்டில் உள்ள ரவுடிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் அவரது ஆதரவு வழக்கறிஞர்களின் சொத்துக்களை கணக்கு போட்டால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேறும். இப்படிப்பட்ட கோடிகளில் மிதக்கும் ரவுடிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பத்து கோடி ரூபாய் திரட்டுவது என்பது லேசான விஷயம்’ என்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு, குற்றம் என்ற கோணத்தில் மட்டுமே ரவுடிகளின் உலகம் பார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி பல்லாயிரம் கோடி ரூபாய் பணம், சொத்துகள் ரவுடிகளிடம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கோணத்திலும் இப்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ரவுடிகளின் சொத்துப் பட்டியலை ஒரு பக்கம் தயாரித்து வருகிறார். அவற்றை முடக்கினால் ரவுடிகளின் அட்டகாசம் குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
இந்தி திணிப்பை பேசுகிறதா ‘ரகு தாத்தா’? : கீர்த்தி சுரேஷ் பதில்!
‘பட்ஜெட் தாக்கல்… தமிழகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்’ : ஸ்டாலின்