தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) விரைவில் அமல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி இது தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது: TAPS-ஐப் பற்றி ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். இருப்பினும், அதைத் திருப்பி ஒருமுறை சொல்லிவிடுகிறேன்.
TAPS-ஐப் பொறுத்தவரை, திமுக ஆட்சிக் காலத்தில்தான் ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்தவற்றில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நமது தமிழக வெற்றிக் கழகமும், மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவார்கள்.
அந்தக் குழு பரிந்துரைத்த முக்கிய மூன்று அம்சங்கள் பின்வருமாறு:
கடைசி மாத ஊதியத்தில் 50% தொகையானது உத்தரவாதமான ஓய்வூதியமாக வழங்கப்படும்.
குழு பரிந்துரைத்துள்ள கிராஜுவிட்டி தொகையும் வழங்கப்படும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதியமும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கிடையில், ஓய்வூதியதாரர்களுக்கு ‘இன்ட்ரிம் பே அவுட்’ (Interim Pay Out) வழங்கும் முறையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
தற்போது இதற்கான விதிகளை (Framing the rules) முறைப்படுத்தும் பணியும், செயல்பாட்டு வழிகாட்டுதல்களை (Operational guidelines) உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளும் (Implementation procedure) கொண்டுவரப்படும்.
இந்த அவைக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன், TAPS திட்டமானது வரவிருக்கும் நாட்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
