தஞ்சாவூரில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீஸ் அதிகாரி ரஹீம் கன்னத்தில் அறைந்ததை, “குறைந்தபட்ச பல பிரயோகம்” என தஞ்சாவூர் போலீசார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.
தஞ்சாவூரில் விசிகவினரின் சாலை மறியலின் போது, ஆகாஷ் என்ற இளைஞரை போலீஸ் அதிகாரி ரஹீம் கன்னத்தில் அறைந்தார். இதற்கு பதிலாக, ரஹீம் கன்னத்தில் ஆகாஷ் அடித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் போலீசார் வெளியிட்ட விளக்க அறிக்கை:
17.8.2026 காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த SSI 928 ரஹீம் அவர்கள் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ந்து ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக SSI ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார்.
உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவருடைய Supervisor மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமிருந்த்து. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு தஞ்சாவூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
