தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா ஏற்று காவிரி நீரை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இதேபோல திமுகவும் மனுத் தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் இம்மனுவை இன்று (ஆகஸ்ட் 17) உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “இன்று காலை நிலவரப்படி கர்நாடகா அணைகளில் 76% நீர் இருப்பு உள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு இதுவரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டியது 64 டிஎம்சி நீர். ஆனால் இதுவரை கிடைத்திருப்பது வெறும் 14 டிஎம்சி நீர்தான்.
நீர்ப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டாலும் கூட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு 55.29% நீர் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
ஆனால் கர்நாடகா அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷ்யாம் திவான், கர்நாடகாவின் காவிரி பாசன பகுதிகளில் மிக மோசமான வறட்சி நிலவுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது இதனையும் கவனத்தில் கொண்டது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை காவிரியில் 3,500 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி தமிழ்நாட்டுக்கு கூடுதலான நீரை காவிரியில் திறந்துவிட்டுவிட்டது” என்றார்.
மேலும், ”ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு 12,000 கன அடிநீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. முதல் சில நாட்கள் நீர்வரத்து 6,000 கன அடியாக இருந்தது. பற்றாக்குறையை இனிவரும் நாட்களில் சரி செய்துவிடுவோம்” என்றும் ஷ்யாம் திவான் கூறினார்.
அத்துடன் இன்று காலை அணைக்கான நீர்வரத்து 12,607 அடியாக இருந்தது; இதனையடுத்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடகா முயற்சிக்கும் என்றும் ஷ்யாம் திவான் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடுவதை கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும்; காவிரி நீர் திறக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கையை மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு (ஆகஸ்ட் 24) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
