கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து 2-வது நாளாக உறவினர்கள் இன்று ஆகஸ்ட் 16-ந் தேதி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியான ஷாக்யா வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாட முயன்றதாக கூறி 3 தமிழரை கர்நாடகா வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதியான தோமையார்பாளையம்- மாரியமங்கலத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள், கர்நாடகா வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால் கர்நாடகா வனத்துறையினரோ, மான் வேட்டையாடிய 3 பேரும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளக்கம் அளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த 3 தமிழரின் உறவினர்கள் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவிலும் நீடித்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடருகிறது.
3 தமிழரை சுட்டுக் கொன்ற வனத்துறை அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடல்களை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவர்களது உறவினர்கள் இன்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதனால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
