தமிழ் கடவுள் முருகன் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறாகத் தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில் CNC ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தமிழ் கடவுள் முருகன் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இவரது இந்தப் பதிவுகள் கடுமையான சர்ச்சையை கிளப்பியது.
இவரது பதிவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, மத மோதலை தூண்டுவது போல் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் மைக்கேல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் அவரது எக்ஸ் கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்குமிடத்தை தேடினர். இந்நிலையில் கோவையில் நேற்று இரவு (ஆகஸ்ட்15) மைக்கேல் ராஜை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் மைக்கேல் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
