தமிழ்நாட்டுக்கு கிடைப்பது காவிரி அணைகளின் ”கசிவு நீர்”தான்; தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவில்லை என்று கர்நாடகா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா ரகசியமாக நீர் திறந்துவிட்டதாக கூறி அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மண்டியாவில் நேற்று ஆகஸ்ட் 15-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் செலுவராயசாமி கூறியதாவது: கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து (கே.ஆர்.எஸ் KRS DAM) தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் மாதம் முதலே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடவில்லை.
தற்போதும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 11,000 கன அடிநீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது. இது அணைகளின் கசிவு நீர்தான். இவ்வாறு செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
