கர்நாடகா வனத்துறையில் ‘என்கவுண்ட்டரில்’ 3 வேட்டைக்காரர்களை சுட்டுக் கொன்றதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக கர்நாடகா வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்றனர்.

உறவினர்கள் மறுப்பும் கொந்தளிப்பும்
ஆனால், கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையாடப் செல்லவில்லை; அப்பாவி பொதுமக்கள் என்று கூறி அவர்களது உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர படுகொலையைக் கண்டித்து ஷாக்யாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அவர்கள் சூறையாடினர்.

3 பேரும் தமிழர்கள்
கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் தோமையார்பாளையம், மாரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள்.
- அந்தோணிசாமி
- பீட்டர்
- குமார் ஆகிய 3 பேரும்தான் கர்நாடகா காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கர்நாடகா முதல்வர் சொன்னது என்ன?
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “ வனப்பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
கர்நாடகா வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் எல்லை மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
