நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி : உதவியாளருக்கு 37 ஆண்டுகள் சிறை – கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற காசோலையில் நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு 38.79 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சார்பு நீதிமன்ற முன்னாள் உதவியாளருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி அறிவுச்செல்வி (57). இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 வரை கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வந்தார்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் விபத்து வழக்கு ஒன்றில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் அப்போது நீதிபதியின் உதவியாளராக பணிபுரிந்த அறிவுச்செல்வி, இந்த உத்தரவு நகலை திருத்தி நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு 4.78 லட்சம் ரூபாயை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

இதேபோன்று மொத்தம் 6 விபத்து வழக்குகளில் உத்தரவுகளை திருத்தி 38.79 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தனது பெயரிலும் தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் பெயரிலும் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இழப்பீட்டுத் தொகை குறிப்பிட்ட நபர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தப்படுவதை அறிந்த சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் 2021 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2024 முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மூன்று மாவட்ட நீதிபதிகள் உட்பட அரசு சார்பில் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 13 சான்று ஆவணங்கள் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

சுமார் 80 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி அறிவுச்செல்வி முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 9 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share