UGC-NET வினாத்தாள் சர்ச்சையைத் தொடர்ந்து மறுதேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை (NTA).
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு: இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப், உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் முனைவர் (PhD) பட்டப்படிப்பு சேர்க்கைக்காக, தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET ஜூன் 22 முதல் 30 வரை 87 பாடங்களில் நடத்தியது.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களைப் பொறுத்தவரை, வினாத்தாள்களில் பிழைகள் உள்ளதாக NTA-க்கு புகார்கள் வந்தன. அதற்கேற்ப, இந்தப் பிழைகள் குறித்து விசாரிக்கவும் ஆராயவும் NTA ஒரு குழுவை அமைத்தது.
இந்த மூன்று வினாத்தாள்களிலும் பல பிழைகள்- அறிஞர்களின் பெயர்கள் தவறாக இடம் பெறுதல், கேள்விகளின் தொடக்க வார்த்தைகளில் பிழைகள், இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து இந்த மூன்று தாள்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
இதனடிப்படையில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்த மூன்று பாடங்களுக்கும் மறுதேர்வு நடைபெறும். இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
