நிலவரி ரத்து…20 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: செங்கோட்டையன் அறிவிப்பு!

Published On:

| By Kavi

20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  சட்டப்பேரவையில் அறிவித்தார். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஆகஸ்ட் 17) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

ADVERTISEMENT

அதன் விவரம்… வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிடும் வகையில், மூன்று அலுவலர் படிநிலைகளில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் இருப்பிட அருகிலேயே தங்களுக்கான சேவைகளை பெறும் வகையில், முதற்கட்டமாக சென்னையில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் 12 சிறு வட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். 

ADVERTISEMENT

விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவரி வசூல் 1436-ஆம் பசலி ஆண்டு முதல் அனைத்தும் ரத்து செய்யப்படும். இனி வரி வாங்குவதே இல்லை, நிலவரியே இருக்காது.

வருவாய்த்துறை சேவைகளை பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிட ஏதுவாக 12,466 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 1,253 குறுவட்ட வருவாய் அலுவலர்களுக்கும் கையடக்கக் கணினிகள் 68 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகட்டி வசித்து வரும் தகுதி வாய்ந்த 20 லட்சத்திற்கு மேலான ஏழை எளிய குடும்பங்கள் பயனடையும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்கிட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 

கணினியமயமாக்கலின் போது ஊரக மற்றும் கிராம நத்தம் நிலப்பதிவேடுகள் ஏற்பட்ட பிழைகளை திருத்த சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்

நில அளவை தொடர்பான சேவையை பொதுமக்களுக்கு விரைந்து வழங்கும் பொருட்டு, களப்பணியாளர்களுக்கு DGPS கருவிகள் 136 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பொதுமக்கள் விரைவாக நில அளவை செய்திடவும், நத்த பட்டாவினை வழங்கிடவும், பட்டா மற்றும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திடவும், தகுதி வாய்ந்த 1,500 நபர்களுக்கு நில அளவை செய்வதற்குரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு உரிமை வழங்கி நில அளவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் அவர்தம் கடமைகளை மேற்கொள்ளும்போது தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்து, அவர்களுக்கு உரிய உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும். இதுவரைக்கும் எல்லாத்துக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது, அதற்காக ஒரு சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.

பேரிடர் காலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்குமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலக பராமரிப்புக்காக—ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு இன்னைக்கு யாருக்குமே பணம் கொடுக்கறதில்லை—மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,000 வழங்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு நில சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961 பிரிவுகள் 37A மற்றும் 37B எளிமைப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் அவர்தம் வாழ்வாதாரம் மற்றும் முக்கிய உடைமைகளின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு மையம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

நெடுஞ்சாலை அமைப்பதற்குத் தேவையான நில எடுப்பு நடைமுறை எளிதாக்கப்படும்.

பேரிடர் மேலாண்மையின் சிறந்த நடைமுறைகளின் பயன்களை தமிழ்நாடு பெறும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதோடு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் சிறப்புத் திறன் மையம் உருவாக்கப்படும்.

பேரிடருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், பேரிடர் மேலாண்மை நிர்ணய நிபுணர்களை மாநில அளவில் செயல்பட்டு வரும் மையத்தில் நியமிக்கப்படுவதோடு, கூடுதல் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தவும் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் திறன் மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த தானியங்கி உதவி அழைப்பு எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு தொழில்நுட்ப அமைப்பு 16 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் நிலச்சரிவு அபாய மதிப்பீடு தணிப்பு நடவடிக்கை, நிலச்சரிவுகளை கண்காணித்தல் மற்றும் நிலச்சரிவு அபாயம் குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அரசு மற்றும் பொது நிறுவனங்களில் நில மாற்றம், நில உரிமை மாற்றம் மற்றும் ஏழை மக்களுக்கான வீட்டுமனை பட்டா போன்றவற்றை விரைந்து வழங்கும் வகையில், நில நிர்வாக ஆணையரகத்தில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இணையவழி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

நிலம் தொடர்பான கருத்துக்கள் மீது விரைந்து முடிவெடுக்கும் வகையில், நில நிர்வாக ஆணையரகத்திற்கு முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

வெள்ள அபாயம் அதிகமாக உள்ள கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களின் வெள்ளத் தணிப்பு நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கை 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share