தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21 முதல் 27-ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்ற கூட்டத்தில் ஹர்ஷ் சங்வி பேசும்போது, “இன்று (அக்டோபர் 21) முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு, போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள். இதற்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடாது என்று அர்த்தமில்லை. ஆனால், நீங்கள் தவறு செய்தால் அதற்கு அபராதம் செலுத்தத் தேவையில்லை.

பொதுநலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுவதற்கு இதனை பயன்படுத்தக்கூடாது. யாரவது விதிகளை மீறினால் குஜராத் போலீசார் பூக்கள் கொடுத்து விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்” என்றார்.
குஜராத் மாநில உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமைச்சரின் கருத்து குறித்து, குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் உங்களை பல விஷயங்களை செய்ய வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய லோக் தள கட்சித் தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரி, “இது என்ன குப்பை. ஓட்டுக்காக வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறீர்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் இவ்வளவு கேலிக்கூத்தாக தேர்தலை தாமதப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
போக்குவரத்து ஓய்வூதியம்: அகவிலைப்படி உயர்வை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!