பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து பிசிசிஐதான் முடிவெடுக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஜெய்ஷாவின் கருத்து குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களைக்கூட கலந்தாலோசிக்காமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பு பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது,
”பாகிஸ்தானுக்கு எதிராக நாளை (அக்டோபர் 23) நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் தான் இந்திய அணி கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 21) செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் ஷர்மா, “உலக கோப்பை டி20 போட்டியில் கவனம் செலுத்துவது என்பதே எங்கள் இலக்கு. ஏனென்றால், இந்த உலக கோப்பை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
அதைப் பற்றி யோசித்து பலனில்லை. பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும்.
நாளைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவதைப் பற்றிதான் நாங்கள் யோசித்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
செல்வம்
9 மணி நேர அறுவைச்சிகிச்சை: சாக்ஸோபோன் வாசித்த நோயாளி!
உடல்கள் வெட்டப்பட்டது எப்படி? -நரபலி வழக்கில் பொம்மை உடலை வைத்து விசாரணை!