VIDEO: தமிழகத்தில் இரவிலும் நீட் எதிர்ப்பு போராட்டம்.. சென்னை, மதுரையில் குண்டுகட்டாக கைது! திமுக, சிபிஎம் கண்டனம்!

Published On:

| By Mathi

Neet Chennai Madurai Protest

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவிலும் போராட்டத்தை தொடருகின்றனர். தமிழ்நாட்டிலும் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று ஜூலை 22-ந் தேதி நள்ளிரவிலும் நடைபெற்று வருகிறது.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே சென்னை எழும்பூரில் இரவில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற மாணவர்கள், இளைஞர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

இதேபோல மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை அருகே இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு அனுமதி மறுத்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாக விரட்டி விரட்டி கைது செய்தனர்.

ADVERTISEMENT

உதயநிதி, கனிமொழி, சு.வெங்கடேசன், தமிழச்சி கண்டனம்

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தும் மாணவர்கள், இளைஞர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன், “டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் SFI மற்றும் DYFI அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“கடந்த காலத் தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லையா?” என்று வினாத்தாள் கசிவுப் பிரச்சினையில் தேசியத் தேர்வு முகமையை (NTA) பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட அதே கேள்வியை தமிழக காவல்துறையைப் பார்த்துக் கேட்கிறோம்.

ADVERTISEMENT

ஒன்றுகூடி அறவழியில் போராடும் இளைஞர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை என்ன? போராட்டமே ஜனநாயகத்தின் உயிர் பகுதி; எதன் பொருட்டும் அதனை இழக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி, “நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில் தான், இன்று இந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதா தவெக அரசு?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே இன்று ஜூலை 22-ந் தேதி திருப்பூரில் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டத்துக்கு DYFI, SFI சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “டெல்லியில் , மாணவர்கள் – பிற அமைப்பினர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட வன்தாக்குதலைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட SFI – DYFI அமைப்பினரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிப்பதும் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். அவர்கள் மீது காவல்துறை இத்தகைய வலுக்கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

கருத்து தெரிவிக்கும் ஜனநாயக உரிமையை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share