பாஜகவில் இருந்து விலகி சென்ற பிறகு மோடி, அமித்ஷா ஆசி எப்படி அண்ணாமலைக்கு கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வாயிலாக இணைந்துள்ளனர். இந்தசூழலில் கரு நாகராஜன் உள்ளிட்ட சிலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, ‘வி ஆர் தி லீடர்ஸ்’ என்கிற ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததாகச் செய்திகள் பார்த்தேன்.
பாஜகவில் சில அடிமட்ட தொண்டர்களை அழைத்து சென்றிருக்கிறார்கள்.
அதாவது, பிரதமர் நரேந்திர மோடியுடைய ஆசியோடுதான் இதை ஆரம்பிக்கிறோம் என்று மூளைச்சலவை செய்து சிலரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது தேசியத் தலைமை என யாருடைய ஆசியும் எந்த இயக்கத்திற்கும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். ஒரு கட்சியிலிருந்து ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு எப்படி ஆசி இருக்க முடியும்?
பாஜக தொண்டர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், யாரும் எதையும் நம்பிப் போக வேண்டிய அவசியம் இல்லை. அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் நிச்சயமாகப் பாஜக தொண்டர்களாக இருக்க முடியாது . பாஜக-வில் இருப்பவர்கள் இங்கு மட்டுமே இருக்க முடியும், வேறு எந்த அமைப்பிலும் இருக்க முடியாது. கிளைத் தலைவர் முதல் மாநில நிர்வாகிகள் வரை யாரும் ஏமாந்து, “பாஜகவிலும் இருக்கலாம், இந்த இயக்கத்திலும் இருக்கலாம்” என்று எண்ண வேண்டாம்; கொள்கை அடிப்படையில் பாஜக-வில் மட்டுமே இருக்க முடியும்.
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீது நம்மால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இங்கிருந்து ஒரு சில பேர் தெரிந்தும் தெரியாமலும் போயிருக்கலாம். அவர்கள் மீண்டும் இந்தக் கட்சிக்கு வர விரும்பினால் அவர்கள் மீது நாங்கள் எப்பொழுதும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், அவர்களை வரவேற்கிறோம்.
அண்ணாமலை கடந்த 18 மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறுவது சரியாக இருக்காது; ஏனெனில் அவர் அனைத்து முக்கிய மேடைகளிலும் தலைவர்களின் அருகிலேயே இருந்தார், பொதுத்தேர்தலில் ஹெலிகாப்டர் மூலம் 100 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
மேலும், பாஜக 2% வாக்குதான் வாங்கியுள்ளது என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 11% வாக்குகளும், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு 22% சராசரி வாக்குகளும் பெற்றுள்ளோம்.
அதிமுக-வில் நடக்கும் உள் கட்சிப் பிரச்சனைகளைப் பற்றி நான் பேச முடியாது. வருங்காலத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் நேரடிப் போட்டி இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தற்போதைய கூட்டணியோடு இணைந்து போட்டியிடும்” என்று கூறினார்.
