அடுத்த கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழிக் கல்வி வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“டிசம்பர் 18ஆம் தேதி நடந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் முடிவில், ஆன்லைன் வழிக் கல்வி மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தின் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்குவதோடு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி அறிவித்துள்ளார். ஆன்லைன் வழிக் கல்வியில் மொத்தம் 91 பட்டப் படிப்புகளைத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து எங்கிருந்து வேண்டுமானாலும் படிப்பதற்கான வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, வரும் கல்வியாண்டில் இந்த ஆன்லைன் கல்வி வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக உயர்மட்டக் குழுவிடமிருந்து இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இணையதளக் கற்றல் மூலம் மாணவர்கள் பலர் பயன் பெறுவார்கள். பெண்களின் கல்வி வளர்ச்சியடையும். பயண நேரம் குறைந்து கற்றலுக்கான நேரம் அதிகமாவது போன்ற பல்வேறு பயன்கள் இதில் உள்ளன. தினசரி நேரடி கல்வி முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான வகுப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது” என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.









