MyV3Ads மோசடி விவகாரம்: புகார் அளித்த பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்? காவல்துறை அலட்சியமா? – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் சுமார் ரூ.2,500 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாகக் கூறப்படும் ‘மைவி3 வி4’ (MyV3Ads) விவகாரத்தில், புகார் கொடுத்தவரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் முறைகேடாக செயல்பட்டு வழக்கை மூடி மறைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்புடைய பாலியல் வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. காவல்துறை அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தப் பின்னணியில், கோவையில் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்திய MYV3 விவகாரத்திலும் காவல்துறை செயல்பாடு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட MYV3 என்ற ஆன்லைன் நிறுவனம், மக்களின் பணத்தை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

ஆன்லைன் மூலம் விளம்பரங்களைப் பார்த்தால் பணம் வழங்கப்படும் எனக் கூறி மோசடி நடைபெற்றதாக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மற்றும் சைபர் கிரைம் காவல் துணை ஆய்வாளர் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், 2024 ஜனவரி 19ஆம் தேதி MYV3 நிறுவனத்தின் மீது கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். இதில் MYV3 நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் உட்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் பணம் வாங்கிக்கொண்டு சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அதேபோல் MYV3 வழக்கையும் காவல்துறை மறைக்க முயன்றதாகவும், தன்னைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் கூறி பாமக முன்னாள் நிர்வாகியும் புகார்தாரருமான அசோக் ஸ்ரீநிதி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “ஜெம் வீரமணி வழக்கில் 70 கோடி ரூபாய் வாங்கிவிட்டு போலீசார் எப்படி வேலை செய்தார்களோ, அதேபோல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். கோவையில் MYV3 ஆப் மூலம் 2,500 கோடி ரூபாய் மோசடியில் ஒருவர் ஈடுபட்டார். அவரை நான் பிடித்துக் கொடுத்தேன். அப்போது எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்கள். 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை தருவதாகப் போலீசாரை வைத்தும், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களை வைத்தும் பேசிப் பார்த்தார்கள். நான் மசியாததால் என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்” என்று குற்றம்சாட்டியதோடு, சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ‘மின்னம்பலம்’ தரப்பில் பாமக முன்னாள் நிர்வாகி அசோக் ஸ்ரீநிதியிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

“3 லட்சம் பேரின் பணத்தைக் காப்பாற்றும் நோக்கில் இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தேன். இதன் பிறகே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. டான்பிட் (TANPID) சட்டத்தின் கீழ், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். அப்போது அதைச் செய்யவில்லை என்றால் இப்போது இந்த மோசடி ரூ.10,000 கோடியைத் தாண்டியிருக்கும்.

CCTV ஆதாரங்களை மறைத்து விபத்தாக மாற்ற முயற்சி

இந்த விவகாரத்தில் புகாரை வாபஸ் பெற வைப்பதற்காகக் கூலிப்படை மூலம் அவிநாசி சாலையில் வைத்து என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. புகார்தாரரான நானே சென்று சிசிடிவி (CCTV) காட்சிகளை சேகரித்து, குற்றவாளிகள் யார் என்பதை ஆதாரத்துடன் காவல்துறையிடம் ஒப்படைத்தேன். இருப்பினும், அப்போதைய காவல் ஆய்வாளர் அர்ஜுன் என்பவர் இந்தச் சம்பவத்தைத திட்டமிட்ட கொலை முயற்சி எனப் பதிவு செய்யவில்லை. காவல்துறை மூடி மறைத்தது.

இதையடுத்து ஒரு மாதம் கழித்து, நானே இன்ஸ்பெக்டருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகத் திட்டமிட்டு பழிசுமத்தினர். அதுகுறித்தும் நான் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளேன்.’

போலி சாட்சிகள்

மேலும், எனது தம்பிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பான புகாரிலும் முறையான விசாரணை நடத்தாமல், போன் மூலம் பேசிவிட்டதாக கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் (Rolling) என்ற விதிமுறை உள்ளது. ஆனால், கோவையில் குறிப்பிட்ட சில ஆய்வாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து அப்போதைய காவல் ஆணையர் கண்ணனிடம் முறையிட்டபோது அலட்சியமாகப் பதிலளித்தார். தற்போது அந்த உயர் அதிகாரியே வேறு ஒரு வழக்கில் சிக்கி தன்மீதான நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார்” எனக் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை தரப்பில் பேசியபோது, “அவர் கூறும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் தொடர்பான வேறு ஒரு விவகாரத்தில் அவர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறியதால் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share