தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 26) முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது.
விடுமுறை முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும்.
1 முதல் 7ஆம் வகுப்பு வரை பாடநூல்கள்
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல்களை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, மதிப்பெண்களை உரிய பதிவேடுகள் மற்றும் EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயதசமியை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

சிறப்பு வகுப்புகள், சுற்றுலாவுக்கு தடை
இதனிடையே, “அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கும், சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதற்கும் அனுமதி இல்லை.
மாணவர்களை அழைத்துச் செல்வதில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் அல்லது முதல்வரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்” என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
