வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.
வங்கி ஊழியர்கள் கோரிக்கை என்ன?
தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக உள்ளன. முதல், 3 மற்றும் 5-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவித்து, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பது வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதற்காக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாகப் பணியாற்றவும் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் மொத்த வேலை நேரம் குறையாது என்பது சங்கங்களின் வாதம்.
வேலைநிறுத்தம் ஏன்?
2024-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தான 12-வது இருதரப்பு ஊதிய ஒப்பந்தத்தின்போது, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிப்பது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் (IBA) தொழிற்சங்கங்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக சங்கங்கள் கூறுகின்றன.
இதுதொடர்பான பரிந்துரையும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தொடர்ந்து அளித்து வரும் விளக்கத்திலும், 5 நாள் வங்கிப் பணி தொடர்பான முடிவு IBA தரப்பில் எடுக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. அதன்பின்னரும் 5 நாள் வங்கிப் பணி தொடர்பாக முடிவு எட்டப்படாததால், செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்த வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) முடிவு செய்துள்ளது.
ஒப்புக்கொள்ளவே இல்லை என்கிறது மத்திய அரசு
இந்நிலையில், நிதியமைச்சக அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் The Indian Express நாளிதழிடம் கூறுகையில், கடந்த ஊதியப் பேச்சுவார்த்தையின்போது 5 நாள் வேலை வாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “5 நாள் வேலை வாரம் என்பது அப்போதைய ஊதியப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதே இல்லை. வங்கி தொழிற்சங்கங்கள் உண்மைகளைத் திரித்துக் கூறுகின்றன” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
