தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமை பெற்ற கோவை, தற்போது மெல்ல மெல்ல உருமாறி இந்தியாவின் “மூத்த குடிமக்களின் சொர்க்கமாக” (Sunset Years Point) மாறி வருகிறது.
டெல்லி, மும்பை, பெங்களூரு எனத் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை ஓடி ஓடி உழைத்துக் கழித்தவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கையைத் தேடித் தேர்ந்தெடுக்கும் முதன்மை நகரமாக கோவை உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து கோவை வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. கல்வி, மருத்துவம், தொழில் துறை எனப் பல்வேறு பிரிவுகளில் முன்னேற்றமடைந்து வரும் சூழலில், கோவையின் உட்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், குறிப்பா விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இச்சூழலில், சத்தமில்லாமல் கோவை தற்போது மற்றொரு துறையில் தனி முத்திரை பதித்துள்ளது. அது என்னவென்றால், இந்தியா முழுவதிலும் முதியோர் குடியிருப்புகள் அதிகம் உள்ள நகரமாக கோவை பரிணமித்திருப்பதுதான்.
இன்றைய வாழ்க்கை சூழலில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள விரும்பினாலும், தங்களின் வாழ்வியல் மற்றும் பணிச் சூழல் காரணமாக அது முடியாத சூழல் உள்ளது. அத்தகையவர்களுக்கு, தற்போது வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்க முதியோர் குடியிருப்புகள் ஓரளவு ஆறுதலான ஒன்றாக பார்க்கப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் இருந்த முதியோர் குடியிருப்புகளில் தங்குவது குறித்த சமூகத்தின் தவறான பார்வையும் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. முன்னர் தங்கள் குழந்தைகள் வெளிநாடு அல்லது வெளி ஊர் செல்லும் போது தனியாக வாழ முடியாதவர்களுக்கான கடைசிக் கட்ட தேர்வாகப் பார்க்கப்பட்ட இது, தற்போது பாதுகாப்பு, வசதி மற்றும் நல்ல சமூக வாழ்க்கையை விரும்பும் முதியவர்கள் வாழ்க்கை முறைத் தேர்வாக மாறியுள்ளது. இதன் காரணமாக முதியோர் குடியிருப்புகளின் தேவையும் அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 70 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்த முதியோர் குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்த நிலையில், தற்போது 58 முதல் 65 வயதுடையவர்கள், பணி ஓய்வு பெற்ற உடனேயே அல்லது பணியில் இருக்கும்போதே தங்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக தாங்களாகவே முன்வந்து முதியோர் குடியிருப்புகளில் வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, JLL மற்றும் ASLI (Association of Senior Living India) அமைப்புகளின் கூட்டறிக்கையின்படி, ஜூன் 2026 நிலவரப்படி இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட முதியோர் வசிப்பிடங்களின் எண்ணிக்கை 25,050 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 2024-லிருந்து 14.2% ஆண்டுக் கூட்டு வளர்ச்சியைக் (CAGR) குறிக்கிறது. மேலும், சிறப்பாக நிர்வகிக்கப்படும் மையங்களில் 80-85% வரை வீடுகள் நிரம்பியுள்ளன.
இந்தியாவிலேயே முதியோர்களுக்கான குடியிருப்புகள் சமூகக் கருத்தாக்கத்தை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய நகரங்களில் கோவையும் ஒன்று. அந்த வகையில், சொகுசு நகரங்களை மிஞ்சும் வகையில் இந்தியாவிலேயே மூத்த குடிமக்களுக்கான முறைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் (Organised Senior-Living Units) அதிகமுள்ள நகரமாக கோவை திகழ்கிறது. இங்கு மட்டும் சுமார் 5,500 பிரத்யேக முதியோர் குடியிருப்புகள் இயங்கி வருகின்றன.
இக்குடியிருப்புகளில் வீடுகளை வாங்குபவர்களில் 75% பேர் கோவைக்கு வெளியில் இருந்து வருபவர்களே. இந்தியாவின் மொத்த மூத்த குடிமக்கள் குடியிருப்புகளில் 22% கோவையில் மட்டுமே உள்ளன என்றும், தென்னிந்திய சந்தையில் இதில் பாதி கோவையில் குவிந்துள்ளது என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, கேரளா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து (Middle East) தாய்நாடு திரும்பும் என்.ஆர்.ஐ-கள் (NRIs) தான் இங்கு அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களில் முதியோர் குடியிருப்புகளில் 60-70% மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், கோவையில் உள்ள பழைய மற்றும் பிரபலமான குடியிருப்புகள் எப்போதுமே 100% முழுமையாக நிரம்பிக் காணப்படுகின்றன. இதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.
மருத்துவ வசதிகள்
உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு வயதான காலத்தில் உடலுக்கு ஏதேனும் உபாதை என்றால் ஓடோடிச் செல்ல நல்ல மருத்துவமனை தேவை.
கோவை தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவ மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. PSG, KMCH, ஜெம், கங்கா, ஜி.குப்புசாமி நாயுடு, ராயல் கேர், போன்ற பன்னாட்டுத் தரத்திலான மருத்துவமனைகள் கோவையில் இயங்கி வருகின்றன. நகரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதிகபட்சமாக அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் மருத்துவமனைகளை அடைந்துவிட முடியும்.

நவீன அலோபதி மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆயுர்வேதம், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்களுக்கும் கோவை பெயர் பெற்றது.
கோவை ஆர்ய வைத்ய சாலா (Arya Vaidya Pharmacy), போன்றவை முதியவர்களின் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் ‘வெல்னஸ்’ (Wellness) வாழ்வியலுக்கு வழிகோலுகின்றன.

சர்வதேச விமானநிலையம்
மூத்த குடிமக்களுக்கு அவசர காலப் பயணங்களுக்கும், வெளிநாடுகளிலோ அல்லது நாட்டின் பிற மாநிலங்களிலோ வசிக்கும் தங்களது பிள்ளைகள் வந்து செல்லவும் கோவை சர்வதேச விமான நிலையம் (Coimbatore International Airport) மிகப்பெரிய பலமாக உள்ளது.
பாதுகாப்பு காரணங்கள்
தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) தரவுகளின்படி, நாட்டின் பெருநகரங்களோடு ஒப்பிடும்போது கோவையில் குற்ற விகிதம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் பெண் முதியோர்களுக்குக் காவல் துறையின் ‘காவல் உதவி’ (Kaval Uthavi) ஆப் மற்றும் சிறப்பு முதியோர் கண்காணிப்பு ரோந்துச் சேவைகள் பெரும் பாதுகாப்பு உணர்வை வழங்குகின்றன.
இயற்கையும் தட்பவெப்ப நிலையும்
சென்னை அல்லது மதுரையைப் போல உஷ்ணம் வாட்டி வதைக்காத மிதமான காலநிலை கோவைக்கு எப்போதுமே ஒரு பிளஸ் பாயிண்ட். பாலக்காட்டுக் கணவாய் வழியாக வீசும் இதமான தென்றல் காற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையும் முதியவர்களின் உடலுக்கும் மனதுக்கும் புதுத் தெம்பைத் தருகின்றன. சாலை விரிவாக்கம் போன்ற அரசின் வளர்ச்சிப் பணிகளால் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, தற்போது நகருக்குள் சற்றே வெப்பநிலை உயர்ந்திருந்தாலும், கோவையின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் அதே இதமான சூழலே நிலவுகிறது.
சுவையான சிறுவாணி நீரும், தூய்மையான காற்றும்
இந்தியாவின் பிற முன்னணித் தொழில்துறை நகரங்களோடு ஒப்பிடும்போது கோவையில் காற்று மாசுபாடு மிகக் குறைவு. அத்துடன், உலகின் மிகச் சுவையான குடிநீரில் ஒன்றான சிறுவாணி ஆற்று நீர் கோவையின் இயற்கை தந்த கொடையாகும். இது முதியவர்களின் செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கிறது. மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும்போது கோவையில் அன்றாட வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து புதிய காய்கறிகளும் பழங்களும் நேரடியாக வருவது முதியவர்களின் பெரும் விருப்பமாக உள்ளது. அத்துடன், விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற கோவை மக்களின் அன்பான குணமும் தனியாக வாழும் முதியவர்களுக்குப் பெரிய நம்பிக்கையைத் தருகிறது.
ஓய்வுக்கால பொழுதுபோக்குகள்
கோவையில் உள்ள முதியோர் குடியிருப்புகளில் வெறும் தங்குமிடம் மட்டுமின்றி, இசை நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்புக் குழுக்கள், யோகா பயிற்சிகள் என ‘செயலில் உள்ள ஓய்வுக்காலம்’ ஊக்குவிக்கப்படுகிறது. இங்குள்ள உணவுப் பண்பாடும் முதியவர்களின் செரிமான ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளது.
பந்தய சாலை (Race Course) நடைபயிற்சிப் பாதை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபெற்ற குளக்கரைகள், ஆன்மீகத் தலங்களான மருதமலை, பேரூர் மற்றும் ஈஷா யோகா மையம் என மனதை அமைதிப்படுத்த ஏராளமான இடங்கள் உள்ளன. ஊட்டி, குன்னூர், பொள்ளாச்சி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அருகிலேயே இருப்பதால் வார இறுதிப் பயணங்களுக்கும் பஞ்சமில்லை.

இத்தகைய சாதகமான காரணங்களால், இன்று இந்தியாவில் மூத்த குடிமக்கள் வசிப்பிடத் துறை சுமார் 10.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையாக வளர்ந்து வருகிறது. வரும் 2050-க்குள் நாட்டின் முதியோர் மக்கள் தொகை 34.6 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமைதி, மருத்துவம், பாதுகாப்பு, இயற்கை என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கோவை மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக இருப்பதில் வியப்பில்லை
சவால்கள்
நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் மனைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோவையின் புறநகர்ப் பகுதிகளான தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட் மனைகளின் விலையும், பராமரிப்புக் கட்டணமும் (Maintenance Costs) கணிசமாக உயர்ந்து வருவதற்கு முதியோர் குடியிருப்புகளின் தேவை அதிகரிப்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், வரும் காலங்களில் அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறப்புப் பராமரிப்பாளர்கள் (Geriatric Caregivers) மற்றும் செவிலியர்களின் தேவையும் அதிகரித்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து மின்னம்பலம் தரப்பில் கோவையில் 10 ஆண்டுகளுக்கு மேல் முதியோர் குடியிப்பில் வசித்து வரும் அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநரும், காமன்வெல்த் ஆசியக் கல்வி ஊடக மையத்தின் (CEMCA) முன்னாள் இயக்குநரும், இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவருமான Dr. ஸ்ரீதரிடம் பேசினோம்.

அவர் நம்மிடம் கூறுகையில் “நான் முதலில் தபோவன் முதியோர் குடியிருப்பில் இருந்தேன். தற்போது பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையத்தில் உள்ள ‘ஸ்ரீ கோவை கேர்’ (S3 Kovai Care) முதியோர் குடியிருப்பில் வசித்து வருகிறேன்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து முதியவர்கள் இங்கு வந்து குடியேறுவதற்கும் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. கோவையின் இதமான காலநிலை, அருகிலேயே அமைந்துள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாஸ்தலங்கள் மற்றும் பசுமையான சூழல் நிலவுகிறது.
பெங்களூருவிலும் கோவையை போன்ற முதியோர் குடியிருப்புகள் அதிகரித்து வந்தாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவுதான். கோவை விமான நிலையம், இரயில் நிலையச் சந்திப்பு ஆகியவை நாட்டின் பிற பகுதிகளுடன் எளிதான தொடர்பை ஏற்படுத்துகின்றன. இங்குள்ள உயர்தர மருத்துவமனைகள் மற்றும் குறைந்த மருத்துவச் செலவுகள் முதியவர்களுக்குப் பாதுகாப்பான சூழலைத் தருகின்றன. தனி அறைகள், அபார்ட்மெண்ட்கள், ‘அசிஸ்டட் லிவிங்’ (Assisted Living) எனத் தேவைகளுக்கேற்ப பல்வேறு வசதிகளுடன் கூடிய முதியோர் குடியிருப்புகள் இங்கு அமைந்துள்ளன. மற்ற முன்னணி நகரங்களை ஒப்பிடும் போது இங்கு செலவும் ஓரளவு குறைவு தான்.” என்கிறார்.
இதுகுறித்து கோவை நானா நானியில் வசித்து வரும் சிபிராஜ் என்பவர் கூறுகையில் “பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை விட கோவையின் அமைதியான பண்பாடு, இதமான காலநிலை மற்றும் அமைதியான நகர்ப்புறச் சூழல் ஆகியவை ஓய்வுகால வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. கோவையின் தனித்துவமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பராமரிக்கும் வசதிகள் சிறப்பானதாக அமைந்துள்ளன. பாதுகாப்பு நிறைந்த மற்றும் அமைதியான நகரம் என்பதால், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஓய்வு பெற்றவர்களும் கோவையையே தங்களின் முதல் தேர்வாக விரும்புகின்றனர்.” என்றார்.
