மும்பைக்கு வர்றேன்.. காலை வெட்டுங்க பார்க்கலாம்.. உத்தவ் சிவசேனாவுக்கு அண்ணாமலை சவால்!

Published On:

| By Mathi

Annamalai Mumbai

மும்பைக்குள் நுழைந்தால் தமது காலை வெட்டுவோம் என உத்தவ் தாக்கரே சிவசேனா விடுத்துள்ள மிரட்டலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 15-ந் தேதி நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

ADVERTISEMENT

அப்போது, ”மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல.. மும்பை ஒரு சர்வதேச நகரம்” என அண்ணாமலை பேசினார். இந்த பேச்சுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மும்பையில் நேற்று பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, அண்ணாமலையை ஒருமையிலும் இழிவாகவும் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதியிருந்தனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் அண்ணாமலை இன்று ஜனவரி 12 கூறியதாவது:

  • என்னை மிரட்டுவதற்கு யாருங்க இந்த ஆதித்ய தாக்கரே, ராஜ்தாக்கரே?
  • நான் பெருமைக்குரிய ஒரு விவசாயி மகன்.
  • என்னை அவதூறு செய்வதற்காக கூட்டங்களை நடத்தி உள்ளனர்; அந்த அளவுக்கு நான் முக்கியமான நபரா என்பது எனக்கு தெரியவில்லை.
  • மும்பைக்குள் நான் கால் வைத்தால் காலை வெட்டுவோம் என சிலர் எழுதி இருக்கின்றனர்; நான் மும்பைக்கு வருகிறேன்.. என் கால்களை வெட்டிப் பார்க்கட்டுமே..
  • இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்சி இருந்தால் நான் கிராமத்திலேயே முடங்கி இருந்திருப்பேன்.
  • இந்தியாவிலேயே மிகப் பெரிய தலைவர் காமராஜர் என்று நான் சொன்னதாலேயே அவர் தமிழர் இல்லை என்பதாகிவிடுமா?
  • அதுபோலத்தான், மும்பை மாநகரம் சர்வதேச நகரம் என்று சொல்வதாலேயே அதை மராத்தியர்கள் நிர்மாணிக்கவில்லை என்றாகிவிடுமா? இவர்களை எல்லாம் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share