முக்தார் மீது குண்டாஸ்: “மீடியாக்களை மிரட்டும் செயல்!”– சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Mukhtar Ahmad

பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக, திருச்சி சூர்யா, யூ டியூபர் முக்தார் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகியோரை, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர் முக்தார் அகமது தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து மோசமாக பேசியது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

முக்தார் அகமது நேர்காணல் செய்யும் விதம், அவர் கேட்கும் கேள்விகள், ஒரு நபரின் அந்தரங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து அவர் வெளியிடும் கருத்து ஆகியவற்றால் சர்சைக்குரிய நபராகவே பார்க்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கும் அவர் மீது கடுமையான விமர்சனம் உள்ளது. சமீபத்தில், அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாகும். அத்துடன், இந்த நடவடிக்கை மறைமுகமாக அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

ஆகவே, பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

ADVERTISEMENT

குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share