Union Budget 2026: தமிழ்நாட்டிற்கு தேர்தல் காலத்தில் கூட எந்த அறிவிப்பும் இல்லை – ரவி குமார் எம்.பி

Published On:

| By Pandeeswari Gurusamy

மத்திய நிதியமைச்சர் 2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு தேர்தல் காலத்தில் கூட எந்த அறிவிப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய  ரவிக்குமார் எம்.பி, “இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. குறிப்பாக, 16வது நிதி ஆணையத்தின் அறிவிப்புகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் கூட, தேர்தல் காலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு ஏதாவது சிறப்பு அறிவிப்புகள் இருக்குமா என்று கேட்டிருந்தார். மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிர்வு 50 சதவீதமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், 16வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மத்திய வரி வருவாய் பகிர்வு 15வது ஆணையத்தின் அடிப்படையிலான 41 சதவீதமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

புதிய அறிவிப்புகள் இல்லை

தமிழகத்துக்கு தேர்தல் காலத்தில் ஏதாவது சிறப்பு அறிவிப்பு இருக்குமா என்று பார்த்தால், பெரிதாக எதுவும் இல்லை. வழக்கமாக தமிழ்நாடு என்று சில வார்த்தைகளையாவது சொல்வார்கள்; ஆனால் இந்த பட்ஜெட்டில் அது கூட இல்லை. ஆதிச்சநல்லூரில் உள்ள அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிவிப்பு மட்டுமே உள்ளது. அது ஏற்கனவே தமிழ்நாடு அரசால் உலக அளவில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு என்று வேறு எந்த புதிய, குறிப்பிடத்தக்க அறிவிப்பும் இல்லை.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அரசு கூறி இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் மொத்தமாகவே இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த 5-6 ஆண்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட MSME-கள் மூடப்பட்டுள்ளன; அதனால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதுவே மோடி அரசின் சாதனை. இந்த பட்ஜெட்டில் MSME-களை மீட்டெடுக்கவோ, வேலைவாய்ப்பை உருவாக்கவோ எந்த குறிப்பிடத்தக்க அறிவிப்பும் இடம்பெறவில்லை.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை (NRIs) பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலையில், இங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்ற இந்தியர்களின் முதலீடுகளை ஈர்க்க முயல்கிறார்கள் போலத் தெரிகிறது. இன்று பங்குச் சந்தை கடுமையான சரிந்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த பெரிய அறிவிப்பும் இல்லாத நிலையில், இந்த வீழ்ச்சி பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.

இப்படியாக, எந்த முக்கிய அறிவிப்பும் இல்லாத, பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே டிரம்ப் 500 சதவீதம் வரி விதிப்பேன் என்று மிரட்டி வருகிறார். கூடுதல் வரிவிதிப்பு காரணமாக நமது பின்னலாடை தொழில் உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடன் வரி ஒப்பந்தம் கூட செய்ய முடியவில்லை.” என காட்டமான விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share