தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள்தொகையைக் குறைத்துள்ளன.
ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகை அதிகமுள்ள வட மாநிலங்களுக்குத் தொகுதிகள் அதிகமாகும், தென்னிந்தியாவிற்குத் தொகுதிகள் குறையலாம் அல்லது மாறாமல் இருக்கலாம்.
இதனால் தொகுதி மறுவரையறைக்கு தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 840 ஆக அதிகரிக்கும் வகையிலான மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று (ஏப்ரல் 16) தாக்கல் செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தசூழலில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ இந்த முக்கியமான மசோதா மீதான விவாதம் இன்று காலை தொடங்கியது. பல உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பியுள்ளனர்
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது சிறந்த உள்கட்டமைப்புகளை மட்டும் குறிப்பதல்ல, மாறாக கொள்கை முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும்.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை இந்தியாவின் பெண்கள் மன்னிக்கமாட்டர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது.
25-30 ஆண்டுகளுக்கு முன்பு, மகளிர் இடஒதுக்கீட்டை யாராவது எதிர்த்தார்கள் என்றால், அது அரசியல் வட்டாரங்களுக்குள்ளேயே முடிந்துவிடும். அது அதற்கு கீழே உள்ள நிலைகளுக்குச் சென்றடையாது.
ஆனால் இப்போது பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பெண் தலைவர்களும், மற்ற பெண்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் இதை எதிர்த்தால், அவர்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள்.
இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பவர்கள், அதற்கான விலையை நீண்ட காலத்திற்குச் செலுத்த வேண்டியிருக்கும்.
நாட்டின் பெண்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 33 சதவிகித பெண்கள் மக்களவைக்கு வர வேண்டும். அவர்களை முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மோடி, “ தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களுக்கு அமித்ஷா விளக்கமளித்துவிட்டார். நான் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவன். அனைவரையும் சமமாகவே மதித்து செல்வேன்
ஒரு கட்சியைத் தவிர, நாங்கள் சந்தித்த மற்ற அனைவரும் எந்தவொரு கொள்கை ரீதியான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
