தேசப்பற்று குறித்து பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தேசப்பற்றுடன் தான் இருக்கிறோம் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்ட குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது
விவாதத்தின் போது கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பேசுகையில்,”உங்களைப் போலவே நானும் தென்னிந்தியாவிலிருந்து வந்த ஒரு இந்தியன் தான். நம்மிடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், திமுக பின்பற்றும் அந்தப் பிரிவினைவாத மொழியை நான் பேசுவதில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடு ஒன்று என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேஜஸ்வி சூர்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி ஆ.ராசா,” , 1971-ல் பாகிஸ்தான் போர் தொடுத்தபோது, இந்த தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் வழங்கியது. வேறு எந்த மாநிலமும் அந்த அளவுக்கு வழங்கவில்லை.
அதேபோல் 1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, டாக்டர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு கார்கில் போருக்காக 100 கோடி ரூபாய் வழங்கியது.
எனவே, அவர் எங்களுக்கு தேசப்பற்று குறித்து பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தேசப்பற்றுடன் தான் இருக்கிறோம். நீங்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் போதும், மாநில சுயாட்சிக்கு உரிய மரியாதையை வழங்காத போதும், எங்கள் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான்!” என தெரிவித்தார்.
