அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சிகளும் குரல்கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 5) கோரிக்கை வைத்துள்ளார். Mk Stalin urges all parties

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார்,

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவர் ஜிகே மணி,

தேமுதிக சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்த தான் இந்த அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதை குறைப்பதற்கான அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு 2026-ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டு தான் செய்வார்கள்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளதால் நம்முடைய தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி-க்கள் கிடைக்கமாட்டார்கள்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

இந்த இரண்டு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை. நமது தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை.

தமிழ்நாடு எதிர்க்கொண்டிருக்கின்ற இந்த முக்கியமான பிரச்சனைகளை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள், ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன்பாக நான் வைக்கிறேன். கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சிகளும் குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்து ஆகவேண்டும். இதில் நமக்குள் கருத்து மாறுபாடுகள் இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். Mk Stalin urges all parties

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share