அம்மா – அப்பா இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க வேண்டும் : உதயநிதி வாழ்த்து!

Published On:

| By Kavi

அம்மா- அப்பா இன்று போல என்றும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) தனது 50ஆவது திருமண நாளை கொண்டாடி வருகிறார். பொன்விழா ஆண்டை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT
(திருமண நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் மரியாதை )

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலினின் திருமண போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், மு.க.ஸ்டாலின் – துர்காவதி திருமண நிகழ்ச்சி அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில், அப்போதைய திமுக பொருளாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் என்றும் அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மற்றும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தனது அம்மா -அப்பாவுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், “அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் – சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் – இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் – கடும் அரசியல் சூழல்கள் – தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா! அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா! பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை – அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் – அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்! அம்மா – அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் – முத்தங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஸ்டாலின், துர்கா இருவரது வாழ்க்கை பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதே போல தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!

எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்” என்று கூறியுள்ளார்.

திமுக எம்.பி.யும் முதல்வரின் சகோதரியுமான கனிமொழி, தனது எகஸ் பக்கத்தில், “திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும்முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினுக்கும் அண்ணி துர்கா ஸ்டாலினுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share