மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவ பொம்மையை எரித்து தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா தற்போது கையில் எடுத்துள்ள மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கர்நாடக-தமிழக எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணை ஒன்றை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால், கர்நாடகாவின் முழுத் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற சூழல் உருவாகும்.
இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, தமிழக விவசாயிகள் இந்தத் திட்டத்திற்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அணை கட்டுவதற்காக அப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் விவசாயிகள் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். வயலில் இறங்கிய விவசாயிகள், கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவ பொம்மையைத் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேகதாட்டு விவகாரத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மௌனம் காப்பதாக தமிழகத்தில் உள்ள தவெக அரசு மற்றும் அதன் முதல்வர் விஜய் ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். கர்நாடக அரசுக்கும், தமிழக தவெக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விவசாயிகளின் இந்தத் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
