மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து வகையிலும் திமுக உறுதுணையாக இருக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 19) தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எங்களுடைய கூட்டணியில் இருக்கிற அந்தக் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேகதாது அணை திட்டத்தை எங்களது தலைவர், அப்போதைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக இந்தத் தீர்மானத்தை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.
மேகதாது அணை கட்ட நினைக்கிற கர்நாடக அரசுக்கு எதிராக நம்முடைய தலைவர்களும், எங்கள் அரசும், தலைவர்களும் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகளை இன்று ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், இந்த அவைக்கும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த ஜூன் மாதத்திலேயே மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்று நம்முடைய தலைவர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து, அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, எந்தக் காலத்திலும் இந்த அணையைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். அதே ஜூலை மாதத்தில் மீண்டும் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினோம்.
கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில், அணை கட்டுவதற்காகக் கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த விவரம் தெரிந்த உடனே, இதே அவையில் அதனைக் கண்டித்து அரசினர் தனித் தீர்மானத்தையும் நம்முடைய அரசு நிறைவேற்றியது. அன்று எங்களுடைய தலைவர் அவர்கள் முதலமைச்சராகப் பேசும்போது, ‘தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்’ என்று இந்த அவையிலே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேகதாது அணை கட்டுவது பற்றிய விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த Agenda-வை நீக்க வேண்டும் என நம் தலைவர் தலைமையிலான அரசு அன்று கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக அப்போதைய முதலமைச்சரான எங்கள் தலைவர், 2022 ஜூலை மாதத்தில் பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சித் குழுவினர், ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள்.
இப்படி நம்முடைய தொடர் எதிர்ப்பின் காரணமாகத்தான், மேகதாது அணையின் Detailed Project Report (DPR) பிப்ரவரி மாதத்தில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், கழக அரசின் பலத்த எதிர்ப்பால் மேகதாது அணையின் Terms of Reference-ஐ தன்னுடைய திட்டப் பட்டியலிலிருந்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024 நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் நம்முடைய நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்ட பிறகுதான் Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், மேகதாது அணை தொடர்பாகக் கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கவே இல்லை என்பதுதான் நம்முடைய கழக அரசு இருந்த வரையிலான நிலைமை. திராவிட முன்னேற்றக் கழக அரசும் நம்முடைய தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் நான் மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், Central Water Commission (மத்திய நீர்வள ஆணையம்) 2018-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
முதலாவது நிபந்தனை: மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதையும் கொடுக்கவில்லை.
இரண்டாவது நிபந்தனை: அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கிற பல்வேறு ஆட்சேபனைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை: மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலங்களைக் கொண்ட மத்திய நீர்வள ஆணையத்தின் பிரிவிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.
எனவே, இந்த அரசு இவற்றை எல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் இணைந்து நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
