17-ஆவது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை நேற்று (ஜூன் 18) நடந்து முடிந்தது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 19, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்குச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் எனப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியவுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தை எதிர்த்து இன்று (ஜூன் 19) அவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், “காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது”
இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் முழு ஆதரவோடு ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
