மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று(மார்ச் 21) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “மேகதாது அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் ”என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “அண்ணா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை காவிரி நீருக்காகப் போராடினார்கள். தற்போது முதல்வர் ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார்.
மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தில் குமாரசாமி, எடியூரப்பா என அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அதுபோன்று மத்தியில் காங்கிரஸ் உட்பட எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் போல் தான் பார்க்கிறது.
எனவே மேகதாது பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும், மேகதாது அணைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, “காவிரி நடுவர் மன்றம் 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 2018இல் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எவ்வித அனுமதியைப் பெறாமலும் தன்னிச்சையாகக் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது என்று மத்திய அரசையும் இம்மாமன்றம் வலியுறுத்துகிறது.
மேகதாதுவில் அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலும் அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் இசைவு இன்றியும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனை பாதுகாத்திடத் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் ஜிகே மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் சமது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
நிறைவாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை உழவர் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்தின் உரிமைகளை மற்றொரு மாநிலம் பறிக்கும் மக்கள் விரோத தீர்மானமாகும். கூட்டாட்சி அமைப்பில் தமிழகத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இந்த தீர்மானம் காட்டுகிறது. இந்த தீர்மானத்திற்குக் கர்நாடகா அரசு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.
மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தின் முடிவு ஏதுவாக இருந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவிரி அதிகார வரம்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்கிய பிறகு மீதமுள்ள நீரின் மீது கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. தமிழகத்தின் அரசியல் முடிவைக் கருத்தில் கொள்ளாமல் மேகதாது திட்டத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
