இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (அக்டோபர் 12) கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட பெண் இரவு 12.30 மணிக்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். எனக்கு தெரிந்தவரையில் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் காட்டுப்பகுதியில் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. அவர் எப்படி அந்த நேரத்தில் வெளியே வர முடிந்தது? இரவில் பெண்கள் கல்லூரி விடுதியை விட்டு செல்ல நிர்வாகத்தினர் அனுமதித்திருக்க கூடாது. தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்கள் மாணவர்களை குறிப்பாக பெண்களை கவனித்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
