தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் 80 லட்சம் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அப்போதைய திமுக அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சுமார் 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தவெக ஆட்சி அமைத்தது. விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க வேண்டியுள்ளதால் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. எனினும், நடப்பு மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி வழக்கம் போல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் வழக்கம்போலச் செலுத்தப்பட்டது.
பரவிய வதந்தி – அரசு விளக்கம்:
இந்தச் சூழலில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இனி புதிய பயனாளிகள் சேர முடியாது என்றும், தற்போதைய பட்டியலில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்” என்றும் சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் தீயாய் பரவின.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இது முற்றிலும் தவறான தகவல்! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். கடந்த மே மாதத்திற்கான தொகையும் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் சரியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ‘மகளிர் உதவித்தொகை’ திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியைச் சிலர் திட்டமிட்டுத் திரித்து, தமிழ்நாட்டில் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு அரசு இது போன்ற எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்; தவறான தகவல்களைப் பரப்பாதீர்!” எனத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
