“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்…” – திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதிகள் எழுப்பிய முக்கிய கேள்வி!

Published On:

| By Pandeeswari Gurusamy

திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு வரும் ஜூன் 22 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மதுரை எழுமலை சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்நிலையில், தீபம் ஏற்றினால் மத ரீதியான பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்றம் தொடர்ந்து தீபம் ஏற்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியும், அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, சட்டம் ஒழுங்கு காரணமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி அரசு தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீடு வழக்கு இன்று (ஜூன் 4) மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, தற்போதைய அரசு தீபம் ஏற்ற அனுமதி வழங்கும் என முழு நம்பிக்கை இருப்பதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி செய்யலாமே. இதில் என்ன சிக்கல் உள்ளது? ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து மாநில அரசின் இறுதி முடிவை ஜூன் 22-ம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share