மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை… வெல்லப் போவது யார்?

Published On:

| By Mathi

Madurantakam-Dharapuram Bypoll

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், இந்த 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் களம் கண்டனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கனிதா சம்பத், சிபிஎம் கட்சி சார்பில் பா. சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டனர்.

மதுராந்தகம் தொகுதியில் 86.26% வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.30% வாக்குகளும் பதிவாகின.

ADVERTISEMENT

அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் இன்று (அக்டோபர் 9) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுராந்தகம் தொகுதிக்கான வாக்குகள் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இரு மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்படும்.

விஜய் ஆட்சியில் முதல் இடைத்தேர்தல்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் இரு தொகுதிகளின் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்புக்குரியவை.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகும். சுற்றுவாரியான வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share