‘நாளைய தீர்ப்பு’… திக் திக் தவெக… 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லுமா?

Published On:

| By Mathi

6 AIADMK-High Court

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்று கொண்டதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (அக்டோபர் 9) தீர்ப்பளிக்க உள்ளது.

சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைப் பெற்று, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து மே 13-ம் தேதி சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா, டாக்டர் இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாக்களை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அந்த மனுக்களில், அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள் நிலுவையில் இருந்தபோது, அவர்களது ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது முறையல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த ராஜினாமாக்கள் உண்மையிலேயே சுயவிருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்டனவா என்பதை சபாநாயகர் முறையாக விசாரிக்கவில்லை என்றும் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே, 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்ட சபாநாயகரின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

சபாநாயகர் தரப்பு வாதம்

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் தரப்பு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகே ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.

ஒரு சட்டசபை உறுப்பினர் தமது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், அவரைக் கட்டாயமாக அந்தப் பதவியில் தொடரச் செய்ய முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

நாளை தீர்ப்பு

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (அக்டோபர் 9) இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share