தவெக ஆட்சி குறித்து விமர்சனம் செய்தேனா? – நாஞ்சில் சம்பத் திடீர் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களைச் சிலர் பரப்பி வருகிறார்கள் என அக்கட்சியின் பரப்புரைச் செயலாளரும், மூத்த அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பதிவில், “உப்பைப் போல எளிமையான தலைவன், தென்றலைப் போல மென்மையான தலைவன், தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய்.

ADVERTISEMENT

இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாகத் திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களைச் சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுப் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “போனால் போகட்டும் போடா… இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா… என்னுடைய பகலையாரும் இருட்டாக்க முடியாது; என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது; என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” எனப் பதிவிட்டிருந்தார்.

இதன் காரணமாக, நாஞ்சில் சம்பத் தவெக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share