விஜய் ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை? – நயினார் நாகேந்திரன் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Nainar

தமிழகத்தின் தலைநகரில் 5 வயது குழந்தைக்குக் கூடப் பாதுகாப்பில்லை முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக ஆட்சியில் காவல்துறை தூங்குகிறதா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரச் சம்பவத்தின் துயரத்திலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை; அதற்குள் அடுத்த கொடூரமாக, சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் பெருந்துயரிலும் ஆழ்த்தியுள்ளது. வாழ்வாதாரம் தேடி தமிழகத்தை நம்பி வந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்குத் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது.

ADVERTISEMENT

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றுப் பேச்சுகளால் அமைந்த தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது. காவல்துறையையும் உள்துறையையும் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் அரசு செயலற்றுக் கிடப்பதால், பொதுமக்களே வீதியில் இறங்கிக் குற்றவாளிகளைப் பிடிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயம் துளியும் இல்லாமல் போனதற்கும், குற்றங்கள் தலைவிரித்தாடுவதற்கும் இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடும் அனுபவமின்மையுமே முக்கியக் காரணம்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசே உயர்தர மருத்துவ சிகிச்சையை முன்னின்று வழங்க வேண்டும். இனியாவது வெற்றுப் பிம்ப அரசியலை விட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகக் களத்தில் இறங்கிக் கவனம் செலுத்த வேண்டும்; சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்றத் தவறினால், தவெக அரசுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share