- சக்திவேல் வீராசாமி
‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்ற சொற்றொடர் உலகளவில் அரசியலில் பிரபலம். ஒரு ஜனநாயக நாட்டில் இது முதன்மையாக பொருந்துவது, அதன் தன்னாட்சி அமைப்புகளுக்குத் தான். ஏனென்றால், அரசைத் தேர்ந்தெடுக்க உதவுவது, அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, அது தவறு செய்தால் தண்டிப்பது என தன்னாட்சி அமைப்புகளின் பங்கு தலையாயது. ஆனால், நமது இந்தியாவில் அத்தகைய தன்னாட்சி அமைப்புகளில் முக்கியமான அமைப்பான இந்திய தேர்தல் ஆணையம், தற்போது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு தெருவுக்கு இழுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் சர்ச்சையில் சிக்குவது முதன்முறை அல்ல. முன்பு அது அரசுக்கும் ஆணையத்துக்கும் இடையேயான அதிகாரச் சண்டையாகவோ, தனிப்பட்ட நபர்களின் அரசியல் சார்பு பிரச்சனையாகவோ, அல்லது ஈவிஎம் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாகவோ இருக்கும். ஆனால், இப்போது குடிமக்களில் யாருக்கு வாக்கு உண்டு, யாருக்கு வாக்கு இல்லை எனக் கட்டுப்படுத்தும் செயலைச் செய்து, அரசியலமைப்பு வழங்கியிருக்கும் ‘வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Adult franchise)’ என்ற உரிமையிலேயே கைவைத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

பிரச்சனையின் ஆரம்பம் மிக நீண்ட நாட்களாக விவாதத்தில் இருக்கும் SIR (Special Intensive Revision). இது என்னவென்றால், சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தமான SSR (Special Summary Revision)-யை விட ஒரு படி மேல். சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் வருடத்துக்கு ஒருமுறை மற்றும் தேர்தலுக்கு முன்பு செய்யப்படும். இதில், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பது, ஏற்கனவே இருக்கும் வாக்காளர்களுக்கான சிறு திருத்தங்களைச் செய்வது நடக்கும். இது Updating electoral roll. ஆனால், SIR என்பது அனைவரின் வாக்களிப்பதற்கான தகுதியை உறுதி செய்து, மீண்டும் புதிதாக பட்டியலையே தயாரிப்பது. இது Fresh electoral roll.

இந்த SIR ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே பலமுறை இந்திய தேர்தல் ஆணையம் சீரான இடைவெளிகளில் இதைச் செய்திருக்கிறது. இன்னும் சொன்னால், இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில் இருந்தே இது செய்யப்பட்டு வருகிறது. பின் எப்படி இது பிரச்சனையானது என்றால், இம்முறை SIR-யை மிகவும் கடினமானதாக, சிக்கலானதாக வடிவமைத்தது இந்திய தேர்தல் ஆணையம். ஒவ்வொருவரும் பல ஆண்டுகளுக்கு முந்தைய SIR கணக்கெடுப்பில், அதாவது இறுதியாக நடந்த கணக்கெடுப்பில் தங்களிருக்கும் தொடர்பைக் காட்ட வேண்டும். இல்லையென்றால், மலை மலையாக ஆவணங்களை தேர்தல் அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று கொடுத்து தங்களுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும்.

இதன் விளைவாக, நாடு முழுவதும் இப்போது வரை 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக டெல்லியில் கிட்டத்தட்ட 33% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கானா, மஹாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 21%. இப்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் அதிர்ச்சி தரவைக்கும் சதவிகிதத்தில் வாக்காளர்கள் நீக்கம் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 11.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மீண்டும் தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டு பெயரை இணைத்துக்கொள்ள முடியும் என்றாலும், அது தொடர்பான முழு நிலவரம் இன்னும் வெளிவரவில்லை. இவர்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.
இங்கே தான் எழுந்துள்ளது தற்போதைய பிரச்சனை. அதாவது, இதுவரை இந்த நீக்கப்பட்ட வாக்காளர்கள் முறைப்படி நீக்கப்பட்டார்கள் என்றே இந்திய மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். தேர்தல் ஆணையம் சொல்லிய ‘புலம்பெயர்ந்தவர்களை நீக்குகிறோம்’ என்ற அறிவிப்பையே மனதுக்குள் சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இதனால், அவர்களின் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் வாக்களிக்க முடியாமல் போனதையும் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சகித்துக்கொண்டார்கள். ஆனால், இப்போது SIR கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்தியதில் பல்வேறு குளறுபடிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதன்மையாக, SIR கணக்கெடுப்பு குறித்த பல முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்திருக்கிறார். அவர் இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்றால், அதற்கு துளியும் அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின் படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் கொண்ட மூன்று பேர் குழு இணைந்து தான் முடிவுகள் எடுக்க முடியும். முடிவுகள் ஒருமனதாக இருந்தால் பிரச்சனையில்லை. ஒருவர் எதற்கேனும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால், வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின் படி, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் ஞானேஷ் குமார் அப்பட்டமாக மீறியிருக்கிறார்.

இரண்டாவதாக, SIR நடைமுறைப்படுத்தியதில் நிகழ்ந்திருக்கும் சட்டக் குளறுபடிகள். ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதே அரசியலமைப்பு விதிகளை மீறிய ஒன்று தான். இதையும் கடந்து மிக முக்கியமாக, புதிய வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் Form 6 விண்ணப்பத்தில், SIR அம்சங்களை நுழைத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். நாடாளுமன்றத்தில் சட்டத்தைத் திருத்தாமல், இப்படி திடீரென்று SIR அம்சங்களை நுழைக்க முடியாது. மேலும், ஆணையத்தின் சிக்கல்களைப் பற்றி மத்திய அரசின் கேபினட் செக்ரட்டரியிடம் தேர்தல் ஆணையர்கள் முறையிட்டதும் நடந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மேல் மத்திய அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கேபினட் செக்ரட்டரியை இதற்குள் வர அனுமதித்திருப்பது தீவிர வரம்பு மீறல்.

மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் மாநில, மாவட்ட அளவில் அதிகாரத்தைப் பரவலாக்கியிருக்கும் அமைப்பு. முக்கியமாக, வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வேலைகளில் மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கு தனித்த அதிகாரங்கள் உண்டு. ஆனால், இந்த SIR விவகாரத்தில், சில சாஃப்ட்வேர்களை உருவாக்கி, அனைத்தையும் டெல்லியில் அமர்ந்துகொண்டு தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம், சேர்ப்பு என அத்தனையும் டெல்லியில் முடிவு செய்யப்பட்டு நடந்திருக்கிறது. மாவட்ட, மாநில அதிகாரிகள் பெரும்பாலான நேரம் அவர்களின் பணியைச் சரியாக செய்ய முடியாதவாறு திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இரண்டு ஆணையர்களும் கூட இது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
நான்காவதாக, இந்திய அரசியலமைப்பு இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் ‘வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற உரிமை, தேர்தல் ஆணையத்தால் பட்டப்பகலில் பறிக்கப்பட்டிருக்கிறது. 13 கோடி பேர் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய எண்ணிக்கையே அல்ல. இது இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை! இதுவரை தேர்தல் ஆணையம் இந்த 13 கோடி பேரில் எத்தனைப் பேர் நியாயமான காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் என்ற திடமான தரவையும் வெளியிடவில்லை. எனவே, சந்தேகம் இன்னும் வலுக்கிறது. உலகளவில் இத்தனை கோடி பேர் கொத்தாக நீக்கப்பட்டது ஒரு ரெக்கார்டு! இத்தனைக்கும் இந்த SIR கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக முடிவடையவும் இல்லை.

இந்த விவகாரம் சமீபநாட்களில் பூதாகரமாக வெடித்ததும், உடனடியாக அவசர கூட்டம் ஒன்றை நடத்தி, எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். ‘அனைத்தும் சரியாகவே நடக்கிறது’ என்ற ஒற்றைப்புள்ளியில் அறிக்கை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் இனி தேர்தல் அலுவலர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டியதில்லை, அலுவலர்களே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள் என்று கூறியிருக்கிறது. புதிய வாக்காளர்களின் பெயர் சேர்ப்புக்காக, சில பகுதிகளில் சிறப்பு முகாம்களையும் கூட அறிவித்திருக்கிறது. மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறது.
ஆனால், இது எதுவுமே பரிதாபகரமாக தரையில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை நூறு சதவிகிதம் நிரூபிக்க போதுமானதல்ல. இந்த அவசர கூட்டமும் அறிக்கையும், சாதாரண குடியிருப்புச் சங்கங்கள் பிரச்சனையை சந்திக்கும் போது சம்பிரதாயக் கூட்டம் நடத்தி வாட்ஸப்பில் புல்லட் பாயிண்டுகளை வெளியிடுவது போன்றது. தேர்தல் ஆணையம் சாதாரண குடியிருப்புச் சங்கமும் அல்ல, அதன் தலைவர்கள் வெறும் குடியிருப்புச் சங்க நிர்வாகிகளும் அல்ல. தேர்தல் ஆணையம் இந்தியாவை நாடாளுமன்றம் தொட்டு உள்ளூர் வார்டு வரை யார் ஆள்வது என, மக்களின் வாக்குப்படி தீர்மானிக்கும் அமைப்பு. அதன் தலைவர்கள் கிட்டத்தட்ட நீதிபதிகளுக்கு நிகரான நியாயத் தராசை ஏந்தியிருப்பவர்கள்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் நாட்டு மக்களுக்கு தங்களது முழு நேர்மையையும் திட்டவட்டமாக நிரூபித்தாக வேண்டும். தங்களின் வாக்குரிமை பறிக்கப்படாமல், தாங்கள் வாக்களிக்கும் தேர்தல்களும் நேர்மையாகத் தான் நடக்கின்றன என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியாக வேண்டும். எதிர்க்கட்சிகள் கேட்பது போல தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கமோ, சுதந்திரமான விசாரணைக்கு உடன்படுவதோ, அல்லது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதோ, எதுவாக இருந்தாலும் அதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும் வகையில் உடனடியாக எடுக்க வேண்டும்.
மக்களை மனசாட்சிப் படி வாக்களிக்கச் சொல்லும் தேர்தல் ஆணையம், தாங்களும் மனசாட்சியோடு நடந்துகொள்வது நல்லது!
கட்டுரையாளர் குறிப்பு

சக்திவேல் வீராசாமி
சுயாதீனப் பத்திரிகையாளர் (Independent Journalist). விகடனில் வரவேற்பு பெற்ற பல அரசியல் கட்டுரைகளை எழுதியவர்.
