தமிழக அரசியலில் அக்டோபர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் அடுத்தடுத்து முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அக்.9-ல் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற தாராபுரம், மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
5 முனை போட்டி நிலவிய இந்த இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த முதலாவது இடைத்தேர்தல் என்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அடுத்த நாளான அக்டோபர் 10-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை வருகிறார்.



அக்.10-ல் ராகுல் காந்தி வருகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணவர்களுடன் ராகுல் காந்தி நேரடியாக கலந்துரையாடும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சி அக்டோபர் 10-ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கல்வி, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். இதில் பங்கேற்க மாணவர்கள் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது.


அக்.11-ல் பிரதமர் மோடி வருகை
ராகுல் காந்தியின் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளான அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டத்தின் பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் பங்கேற்கிறார்.

அத்துடன் பூந்தமல்லி- போரூர் இடையே மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் இணைந்து பயணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக- காங்கிரஸ் உறவு
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ். தவெகவுக்காகவே திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டது காங்கிரஸ். மே 10-ம் தேதி நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி நேரில் கலந்து கொண்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் விஜய் அமைச்சரவையிலும் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நீட் விவகாரத்திலும் காங்கிரஸ் – தவெக ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. ஜூலை மாதம் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஜூலை 21-ம் தேதி பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்தார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்த அவர், மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கும் தவெக முழு ஆதரவு அளிப்பதாக விஜய் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த நெருக்கம் தொடருகிறதா? என்கிற கேள்வி பிரதமர் வேட்பாளர் விவகாரம் வெடித்த போது எழுந்தது.
தவெக அமைச்சர்கள் உள்ளிட்டோர், 2029 மக்களவைத் தேர்தலில் முதல்வர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என பேச, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என கடுப்படிக்க இருதரப்பு உறவும் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் ராகுல் காந்தியின் தூதர்களாக மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக அமைச்சர்கள் சற்று அடக்கியே வாசிக்கின்றனர்.

அதேநேரத்தில் தேசிய அளவில் காங்கிரஸும் ராகுல் காந்தியும் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் தவெக உடனே ஆதரவு தந்துவிடுவதும் இல்லை; டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தவெக பங்கேற்காதது விவாதப் பொருளானது. ஆனால் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன் கலந்து கொண்டனர்.

ஆனால் தற்போது டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் பற்றி முதல்வர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இப்படித்தான் தவெக- காங்கிரஸ் இடையேயான உறவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ராகுல் காந்தி 2-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி மாமல்லபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை.
ராகுல்- விஜய் சந்திப்பு?
தற்போது மீண்டும் ராகுல் காந்தி வரும் 10-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். அன்றைய தினமாவது ராகுல் காந்தியை விஜய் சந்திப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக நாம் காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, “ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும் என்பது இயல்பாகவே கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பாக தமிழக தலைவர்கள் சிலர் முதல்வர் விஜய் தரப்புடன் பேசியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. வரும் 10-ந் தேதி மாலை நிகழ்ச்சியில்தான் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தற்போதைய நிலையில் அப்படி ஒரு சந்திப்பு நடப்பதாக இருந்தால் அக்டோபர் 10-ம் தேதி பிற்பகலில் அல்லது இரவு விருந்தில் ராகுலும் விஜய்யும் சந்திக்கலாம்” என்கின்றனர்.
ஆனால் மூத்த பத்திரிகையாளர்களோ, “ராகுல் காந்தியை விஜய் இந்த முறையும் சந்திப்பாரா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விஜய் பங்கேற்கிறார். பொதுவாகவே மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முதல்வர் விஜய்யோ தவெகவோ வெளிப்படுத்துவது இல்லை; மத்திய அரசுடன் இணக்கமான நல்லுறவைத்தான் விஜய் விரும்புகிறார். அதனால் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்று ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நிகழ்ச்சிகளை வைத்து கொண்டு அதற்கு முதல் நாள் ராகுல் காந்தியை சந்திப்பாரா? என்பது சந்தேகமே” என்கின்றனர்.
இதனால் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்டோபர் 9-ம் தொடங்கி, ராகுல் காந்தி வருகை தரும் அக்டோபர் 10, பிரதமர் மோடி வருகை தரும் அக்டோபர் 11-ம் தேதி வரை அடுத்தடுத்த மூன்று நாட்களும் தமிழக அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
