மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதுராந்தகத்தில் ஜானகிராமன், தாராபுரத்தில் கார்த்திகா ஆகிய இருவரும் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்தனர். அதேபோல், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் ஏழு தொகுதிகள் தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, எஞ்சிய தொகுதிகளில் தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார். அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். அதேபோல், புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக்குமாரி போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஐந்து முனைப் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. ஆளுங்கட்சியான த.வெ.க, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நா.த.க மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தாலும், இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக இன்று கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
