அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேசத் தொடங்கியுள்ளன.
இந்தசூழலில் என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தன.
இதற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு வெறும் ஆறு சீட் என தகவல் வெளியிட்ட அந்தக் கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்று ஆக்ரோஷமாக சென்னையில் பேட்டி அளித்தார்.
இந்தசூழலில் இன்று மாலை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷ் சென்றுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்தின் குருபூஜையில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
மேலும் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. எல்லா தலைவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்கு சென்ற எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் வழங்கினார்.
வரும் டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
