ஆதவ் அர்ஜூனாவுக்கு கேபிமுனுசாமி ‘இறுதி எச்சரிக்கை’!

Published On:

| By Mathi

KP Munusamy Aadhav Arjuna

தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜூனாவுக்கு (Aadhav Arjuna) அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி (KP Munusamy) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துக்களை தான் தோன்றித்தனமாக பதிய வைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

அவர் ஒரு கட்சியில் உறுப்பினராகி, அந்த கட்சித் தலைவரை கொள்கை ரீதியாகத் தலைவராக ஏற்றுக்கொண்டு, அந்த கட்சி வளர்வதற்குத் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டு, இவருடைய உழைப்பின் இணைந்து ஒரு தலைவர் உருவாகி இருந்தால், அந்த தலைவர் மீது எவ்வளவு பற்றோடு இருக்க வேண்டும் என்று அவருக்கு புரிந்திருக்கும்.

நெல் மேல் குருவி போல எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடி ஓடிச் சென்று… ஏற்கனவே நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊடகங்களுக்கு நான் இந்த கருத்தைச் சொன்னேன். முதலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓடினார்; அங்கு வாய்ப்பில்லை. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் போனார்; வாய்ப்பில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வந்தார்; வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக தமிழக வெற்றிக் கழகத்திற்குப் போனார்; தேர்தல் வந்தது, வாய்ப்பு கிடைத்தது, அமைச்சர் ஆனார். அதோடு அவர் நின்றுவிட வேண்டும்.

ADVERTISEMENT

இந்த சந்தர்ப்பவாதி கொச்சைப்படுத்துகிறார். இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்று சொன்னால், நேரடியாகப் போராட்டத்தில அவர் முன்பாகவே நான் சென்று விடுவேன் என்பதை இறுதி எச்சரிக்கையாகக் கூறுகிறேன்.

நாவடக்கம் வேண்டும் ஆதவ் அர்ஜுனா அவர்களே, நாவடக்கம் வேண்டும். உங்களைப் போல் பல கட்சிக்குச் சென்று பதவி சுகம் அனுபவித்தவர் அல்ல என்னுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

அவரைப் பற்றி (எடப்பாடியாரைப் பற்றி) கருத்துக்கள் சொல்வதற்கு உங்களுக்கு எந்தவிதமான உரிமையும், தார்மீக உரிமையும் இல்லை. தயவுசெய்து மற்ற கட்சித் தலைவர்களை உதாசீனப்படுத்திப் பேச வேண்டாம் என்பதை நான் இந்த நேரத்தில் எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

நான் கேட்கிறேன் ஆதவ் அர்ஜுனா அவர்களே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாறு தெரியுமா?

எங்கள் கட்சியைப் பற்றியோ, எங்கள் தலைவரைப் பற்றியோ பேசுவதற்கு எந்தவித அருகதையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக-வும் தவெக-வும் ஒன்று என கூறுவது தவறு, இரண்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதிமுக என்பது 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்த பாரம்பரியமிக்க முதன்மையான இயக்கம். அண்ணன் எடப்பாடியார் மீது தொண்டர்கள் அளவுகடந்த பாசம் வைத்துள்ளனர். கழகத்தில் குழப்பம் ஏற்பட்டபோது, கட்சியைக் காக்க எடப்பாடியாருக்குப் பக்கபலமாக இருக்கச் சொல்லி தன் உயிரையே மாய்த்துக் கொண்ட தொண்டனே அதற்கு சாட்சி. இவ்வாறு கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share