ADVERTISEMENT

விஜய் தரப்பில் எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதா? – கே.பி.முனுசாமி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்கு நேரம் கோரவில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டதாக கூறியது தவறானது. எந்தவொரு சூழலிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரோ அல்லது அவரது அலுவலகத்திலிருந்தோ அதிமுக பொதுச்செயலாளரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. அவர்கள் அதிமுக தரப்புடன் எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளாமல், கட்சியின் மற்ற தலைவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் ‘இப்போது வேண்டாம்’ என்று சொன்னதாகவும் அமைச்சர் கூறியிருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது” என்றார்.

மாயத் தோற்றத்தால் கிடைத்த வெற்றி

திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், ‘தீய சக்தி, தீர்ந்து போன சக்தி’ எனப் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமாவில் உணர்ச்சியைத் தூண்டும் ஸ்டண்ட் காட்சிகளைப் போல, இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் மூலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஈர்த்து விஜய் வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் ‘எனக்காக தம்பி இருக்கிறான், சகோதரி இருக்கிறாள்’ என்று உணர்ச்சியைத் தூண்டி, அவர்கன் பெற்றோர்களையும் விஜய்க்கு வாக்களிக்க வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வெற்றி என்பது சமூகத் தொண்டுக்காகவோ அல்லது தியாகத்துக்காகவோ கிடைத்ததல்ல. நீண்ட காலம் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்ததால், மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வாக்களித்திருக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலும் இந்த வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சரான விஜய் தனது நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் உழைத்து இந்த பதவிக்கு வந்துவிடவில்லை. நடிப்புத் தொழிலில் உருவாக்கிய மாயத் தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் காட்டி மக்களை ஈர்த்துள்ளார். இளைஞர்கள் அந்த நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர்; அதை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் சினிமா டயலாக் பேசுவதைப் போல 18 நிமிடங்கள் பேசினார். ஒரு வசனகர்த்தாவால் கருத்துக்களை எப்படியாவது மாற்றி மாற்றிச் சொல்ல முடியும். அப்படி யாரோ எழுதிக்கொடுத்த டயலாக்கைத்தான் விஜய் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார். மக்கள் எதற்காக வாக்களித்தார்கள், தாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோம், ஆட்சிக்கு வந்த பிறகு என்ன திட்டங்களைக் கொண்டுவரப் போகிறோம் என்பதை சட்டமன்றத்திலோ, பிரதமரிடமோ அல்லது நன்றி அறிவிப்பு கூட்டத்திலோ அவர் தெளிவாகச் சொல்லவில்லை. சொந்த சிந்தனை இல்லாததால் சினிமாவைப்போல் வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டார்” என்று சாடினார்.

எந்தக் கட்சியும் தீர்ந்து போகாது!

அதிமுகவை ‘தீர்ந்து போன கட்சி, தூர்ந்து போன கட்சி’ என்று விஜய் விமர்சித்தது குறித்துப் பேசிய கே.பி.முனுசாமி, “விஜய் என்ன சொல்கிறார் என்றே எங்களுக்குப் புரியவில்லை. கொள்கையோடு ஒரே ஒரு தொண்டன் இருந்தால் கூட எந்தக் கட்சியும் தீர்ந்து போகாது, ஒழிந்து போகாது. இதற்கு உதாரணமாக, நூறாண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. தங்களால் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும், பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு உடையவர்கள் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுடைய கொள்கையை முன்னிறுத்தி இறுதிவரை போராடுகிறார்கள். அதுபோலத்தான் அதிமுகவும் மக்களின் நலனுக்காகவும், தனது கொள்கைக்காகவும் இறுதிவரை போராடும்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share