காவல்துறை மீது முழு நம்பிக்கை இல்லையா? – முதல்வர் விஜய்க்கு இன்பதுரை எம்பி யின் அடுக்கடுக்கான கேள்விகள்

Published On:

| By Pandeeswari Gurusamy

CM Vijay

தமிழக முதலமைச்சர் விஜய், அரசுப் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது குறித்து அதிமுக எம்பி இன்பதுரை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இவர், துபாயில் பிரபலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் நயீம் மூசா. இவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பிருந்தே, அவரது தனிப்பட்ட பாதுகாவலராக இருந்து வருகிறார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, விஜய்யின் முதன்மைப் பாதுகாவலராக இவர் நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

விஜய்யின் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் இவர் விஜயுடன் இருந்து வந்தார். தேர்தல் முடிந்து, மே 10-ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகும், நயிம் மூசா தொடர்ச்சியாக அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். விஜய்க்கு ஏற்கனவே ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சராக ஒருவர் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு மத்திய அரசின் ‘இசட் பிளஸ்’ (Z+) உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், முதன்முறையாக அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க டெல்லி சென்றபோதும் அவருடன் நயிம் மூசா சென்றிருந்தார்.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், அரசுப் பாதுகாப்பையும் மீறி முதல்வர் தனது தனிப்பட்ட பாதுகாவலரைத் தொடர்ந்து கூடவே வைத்திருப்பது குறித்து அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் தளப் பதிவில் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில்,”Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?

மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?

ADVERTISEMENT

அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?

பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.

உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் வெளிநபர் ஒருவர் அனுமதிக்கப்படுவது, மாநிலத்தின் ‘தகவல் பாதுகாப்பு’ சார்ந்த விஷயம் என்பதால், இன்பதுரையின் இந்தக் கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share